சிங்கப்பூர் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது வானுயர்ந்த கட்டிடங்களும், விரைவுச் சாலைகளும், இரவிலும் ஒளிரும் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான நகரமும் தான். ஆனால் சிங்கப்பூரின் இந்த மாற்றங்கள் யாவும் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்தவையே. இயற்கையில் சிங்கப்பூர் மழைக்காடுகளும், அலையாத்திக்காடுகளும் நிறைந்த ஒரு தீவு. பல மில்லியன் ஆண்டுகளாக இந்தத் தீவு அப்படிதான் இருந்தது. மனிதர்கள் இந்தத் தீவை மாற்றி அமைக்காதவரை பல்லுயிர்ச்சூழல் நிறைந்த ஒரு அற்புத பூமி சிங்கப்பூர்.
அந்த பல்லுயிர்ச் சூழலின் மிச்சத்தை இப்போதும் சிங்கப்பூரில் உணர முடிகிறது. இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும் கூட, சிங்கப்பூர் தன்னுடைய பசுமைப் பரப்பை அதிகரிக்க முயற்சி செய்கிறது. சிராங்கூன் ஆறு கடலில் கலக்கும் இடத்தில், கோணித் தீவுக்கும், பொங்கோல் பகுதிக்கும் இடையே அமைக்கப்பட்டிருக்கும் அணை மூலமாக ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த நீர்த் தேக்கத்தை சுற்றிலும் கரை முழுவதும் மரங்களும், புதர்களுமாக அற்புதமாக கட்சி அளிக்கிறது. அதை முழுவதும் சுற்றி வருவதற்கு, மிதிவண்டி ஓட்டிச்செல்ல வசதியாக சாலை அமைத்திருக்கிறார்கள்.
சில இடங்களில் புதிய மரக்கன்றுகள் நடும் பணியும் தொடர்ந்து நடக்கிறது. கரை ஓரங்களில் இருக்கும் புதர்கள் ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்வளிக்கிறது. ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மர பெஞ்சுகளில் அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம். கோணித் தீவுக்கு முன்பாக ஒரு சிறிய பூங்கா அமைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் விதமாக ஏராளமான செடிகளை நட்டு வைத்திருக்கிறார்கள். 2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவற்றை நட்டு வைத்தார்கள். நான் அந்த பகுதிக்கு போதெல்லாம் அந்தச் செடிகளின் வளர்ச்சியை கவனித்து வந்தேன்.
2024-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வரலாற்றில் மிகக் கடுமையான கோடை காலமாக இருந்தது. ஒரு முறை அந்த செடிகள் அனைத்தும் மிகவும் வாடி இருந்தன. அவ்வப்போது பெய்த மழையால் எப்படியோ மீண்டுவிட்டன. தற்போது அவை அனைத்தும் நன்கு வளர்ந்துள்ளன. எதிர்பார்த்தது போல, நிறைய வண்ணத்துப்பூச்சிகளை அங்கு பார்க்க முடிகிறது. அங்கிருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்துகொண்டால், காலை நேரத்தில் பல்வேறு வண்ணத்துபூச்சி இனங்களை பார்க்க முடியும்.
கடந்த வாரம், அங்கே அமர்ந்திருந்த போது, அருகிலிருந்த புதரில் ஏதோ சத்தம் கேட்க, எச்சரிக்கையோடு அங்கிருந்து மெல்ல நகரத்து சென்று கவனித்தேன். புதரில் இருந்து வெளியே வந்த நீர் உடும்பு [Malayan Water Monitor Lizard] ஒரு மரத்தில் வேகமாக ஏறியது. நீர் உடும்புகள் இந்த பகுதியில் எப்போதும் பார்க்கக்கூடிய ஒரு உயிரினம் தான். நடைபயிற்சி செல்பவர்களும், மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு, தினந்தோறும் பார்க்கும் ஒரு உயிரினம் தான். ஆனால் அன்று, அதன் போக்கு முற்றிலும் வேறாக இருந்தது.
சற்று தூரம் தள்ளி அந்த நீர் உடும்பு வெளிவந்த புதருக்கு கீழே நீர்த்தேக்கத்தை கவனித்தேன். நீர் நாய்கள் கூட்டமாக இருந்தன. நீர் உடும்பு மிரட்சி அடைந்ததற்கான காரணம் புரிந்தது. ஒரு நீர் நாய் [Smooth Coated Otter] இரண்டு கைகளாலும் ஒரு மீனை அழகாக பிடித்து சுவைத்துக் கொண்டிருந்தது. மனிதர்களும், காட்டுயிர்களை இணைந்து வாழ பசுமை நிலப்பரப்பு தேவை என்பதையும், இது சாத்தியம் என்பதற்கும் உதாரணம் நீர் நாய்கள். இன்று சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் நீர் நாய்கள் காணப்படுகின்றன. நீர் நாய்கள் கூட்டமாக வாழும் உயிரினம். பூங்காக்களிலும், நீர்த்தேக்கங்களிலும் அவை எளிதாக தென்படுகின்றன. நன்னீரின் அடையாளமாகவும் நீர் நாய்கள் விளங்குகின்றன. மாசடைந்த நீரில், உயிர்ச் சூழல் அற்றுப்போனால் அங்கு நீர் நாய்கள் வாழ முடியாது. அவற்றின் எண்ணிக்கை பெருகவதில் இருந்து, நன்னீரின் தன்மையை நம்மால் உணர முடியும்.
நீர் நாய்களை போலவே ஒரு சில பகுதிகளில் காட்டுப் பன்றிகளும் காணப்படுகின்றன . நான் நீர் நாயை பார்த்த அதே இடத்தில் காட்டுப்பன்றிகளை [Wild Pig] பார்த்திருக்கிறேன். ஆனால் நகர விரிவாக்கம் அதற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது என்றே தோன்றுகிறது. சமீப நாட்களாக அவை எதுவும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் தென்படவில்லை. ஆனாலும், சிங்கப்பூரில் முற்றிலுமாக அற்றுப்போன தும்பிப் பன்றி சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு பொங்கோல் பகுதியில் தென்பட்டது. மிதிவண்டி ஒட்டிச் சென்ற சிலர் அந்த தும்பிப் பன்றியை படம்பிடித்து உறுதி செய்தனர். அது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, அவை மலேசியாவில் இருந்து ஜோகர் கடலை நீந்திக் கடந்து சிங்கப்பூருக்குள் வந்திருக்கலாம் என்று கூறினர்.
காடழிப்பு, ஒரு உயிரினத்திற்கு எப்படி எல்லாம் தொல்லையாக அமையும், எவ்வளவு அழுத்தம் தரும் என்பதற்கு உதாரணம் தான் இந்த தும்பிப் பன்றி. தற்போதும் சிங்கப்பூரில் மீதமிருக்கும் கடமான்கள் [Sambar Deer], தன்னுடைய வாழிடத்தையும், வாழ்வையும் நெடுஞ்சாலைகளுக்கு பலிகொடுக்கிறது. சிங்கப்பூரில் முற்றிலுமாக அற்றுப்போன மலாயன் புலிகளின் [Malayan Tiger] நிலை அவற்றிக்கு வராதிருக்க வேண்டும்.
சிங்கப்பூரின் மையத்தில் அமைந்திருக்கும் புக்கிட் திமா என்ற மலை இப்பொழுதும் மரங்கள் அடர்ந்த காடாக இருக்கிறது. மலாயன் புலிகள் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் முக்கியமான ஒன்று.
வங்கப் புலிகளை சற்றே சிறிய இந்த புலி இனம் வாழ்ந்து வந்ததன் அடிப்படையில், சிங்கப்பூரின் உயிர்ச்சூழல் எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறது. 1930 ஆண்டு சிங்கப்பூரில் வாழ்ந்த கடைசி புலி ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது. தற்போது இது பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக இருக்கிறது. இங்கே இருக்கும் அடர்ந்த மரங்களில் ஏராளமான பறவை இனங்களை பார்க்க முடிகிறது.
குறிப்பாக கொண்டைக் குருவிகளின் பல இனங்கள், துடுப்புவால் கரிச்சான் [Rocket tailed Drongo], நீலச் சிட்டு [Asian Fairy Bluebird], தேன் சிட்டு இனங்கள், மலர் கொத்தி இனங்கள், மரங்கொத்தி இனங்கள், புறா இனங்கள் எனப் பல பறவையினங்களை காண முடிகிறது. மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் தரைப்பரப்பு முழுவதும் அடர்ந்திருக்கிறது. மழை நேரங்களில், ஒரு மழைக் காட்டை பெரு நகரத்தின் மத்தியில் இன்றும் உணர முடிகிறது. 163 மீட்டர் உயரம் கொண்ட இந்த புக்கிட் திமா மலையில் வாகனங்கள் சொல்லும்படியாக சாலைகள் இல்லை. நடந்தே செல்ல வேண்டும் என்பதால், அதிக பாதிப்புகளை சந்திக்காமல் இருக்கிறது. இந்த மலையின் உச்சியில் நின்று சுற்றி இருக்கும் நெடு மரங்களில் பறவைகளை நோக்க முடியும். மலையின் உச்சியை அடைந்தபோது, பகல் பொழுதிலும் அதிக ஒளி ஊடுருவ முடியாதபடி இருந்த மரங்களுக்குள் நீலச்சிட்டின் சிறகுகள் ஒளிர்ந்தன. இது போன்ற மழைக் காடுகளில் பறவைகளை நோக்குவதில் இருக்கும் ஒரு சிக்கல் அவை கவிகையில் [Canopy] இருப்பது தான். கீழிருந்து பார்க்கும் பொழுது அவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூருக்கு ஏராளமான பறவைகள் வலசையாக வருகின்றன. சிங்கப்பூர் ஒரு தீவு நகரம் என்பதால், கடல் பறவை இனங்கள், கழிமுகப்பறவை இனங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு வலசையாக வரும் பறவையினங்கள் என பல பறவையினங்களை இங்கே பார்க்க முடியும். சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் நீர் நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன. அங்கே வலசை பறவைகள் பூமியின் வடதுருவத்தில் இருந்து வருகின்றன. மேலும், மழைக் காடுகளின் மீதம், மழைக் காடுகளுக்கே உரித்தான பல பறவை இனங்களைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் பறவை நோக்குதல் மற்றும் படம் எடுத்தல் பலருக்கும் முக்கிய பொழுதுபோக்காக இருக்கிறது. சில நேரங்களில் அது பறவைகளுக்கு தொல்லையாகவும் இருந்துவிடுகிறது. கூட்டமாக மக்கள் போட்டி போட்டுகொண்டு, பறவைகளின் கூடுகளை மிக நெருக்கமாக அணுகி படம் எடுப்பதும் நடக்கிறது. மிகவும் அரிதான பறவைகள் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதால், எளிதாக எல்லோரையும் ஈர்த்துவிடுகிறது. சமீபத்தில், சாலை ஓரத்தில் இருந்த ஒரு ஆந்தையின் கூட்டை படம் எடுக்க மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இடர்பாடுகள் இருந்ததாலும், சில முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. குறிப்பாக இருவாட்சி [Oriental Pied Hornbill] பறவையினத்தை மீட்டெடுத்ததில், சிங்கப்பூர் ஒரு முன்னுதாரணம். இன்று சிங்கப்பூரின் மையப்பகுதிகளில் கூட இருவாட்சிகளை பார்க்க முடிகிறது. அதே போல மிக மிக குறைந்த எண்ணிக்கையில், அழிவில் விளிம்பில் இருக்கும் மந்திகளை [Raffles banded Langur] பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு மந்திக்கும் பெயரிட்டு மிகுந்த கவனத்தோடு, கண்காணிப்பு கேமராக்களோடு அவற்றை பாதுகாக்கிறார்கள். நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிக்கிருக்கும் பசுமை பாலத்தை அவை பயன்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் ஒரு வளர்ச்சியடைந்த நகரமயமானாலும், இன்றும் அதனை உயிர்ப்போடு வைத்திருப்பது இந்த பல்லுயிர்ச்சூழல் தான். தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி கூர்மையாக அவதானித்தால், நம்மை சுற்றி நிகழும் அற்புதங்களை உணர முடியும். சிங்கப்பூர் எங்கும் மரங்கள். அதன் கவிகையில் சுற்றி அலையும் மாங்குயில்களை [Black naped Oriole], நடை பாதையின் மெல்ல ஊரும் நத்தைகளை, பைங்கிளிகள் [Rose ringed Parakeet] அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கி நேர்கோட்டில் பறந்து வருகிற தேன் பருந்தை [Oriental Honey Buzzard] என எங்கும் பார்த்து மகிழ, குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
*சிராங்கூன் இதழில் வெளியான எனது கட்டுரை.
என்னுடைய நூல்களை தபாலில் பெற :
0 Comments