கொடைக்கானல் குல்லா - வாசிப்பனுபவம் 7 - திரு. பிராபகர்

தோழர் திரு.பிரபாகர் அவர்களின் அற்புதமான வாசிப்பனுபவம். நன்றி சார்.

**********

குழந்தைகளும் பல்லுயிர் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்

இயற்கை வரலாறு சூழல் பிரச்சனைகள், நதிநீர் இணைப்பு, ஒலி மாசு, பருவநிலை பிறழ்வு, இயற்கை வளம் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து சமூகத்திற்கு உதவக்கூடிய கட்டுரைகளையும், நூல்களையும் வழங்கி வருவதையும் கொடைக்கானல் குல்லா நூலினையும் படைத்தவர் எழுத்தாளர் சதீஷ் முத்து கோபால் .

சுற்றுலா என்றால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் மகிழ்ச்சி கொள்ளாவார்கள். 

ஈரோட்டில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்று வரும் அனுபவம் தான் இந்த நூல். 

வீட்டிலிருந்து கிளம்பி காவேரி ஆறு, அமராவதி ஆறு ,பழனி மலைகள் எல்லாம் கடந்து கொடைக்கானல் வரவேண்டும். அப்படி வரும்போது என்னெல்லாம் பார்த்தோமோ அதை எல்லாம் குழந்தை, தனது தாய் தந்தையிடம் கேள்வியாக கேட்டு விளக்கங்கள் பெற்றுக் கொள்கிறார். 

மூன்று நாட்களும் கொடைக்கானலில் ஒவ்வொரு இடத்தையும் பார்த்து மகிழ்கிறார்கள்.

மலைப்பகுதியில் இருந்து ஆறுகள் எப்படி உருவாகிறது? அங்கே வாழும் காட்டுயிர்கள் என்னென்ன ? மரங்கள், மற்றும் காட்டில் வசிக்கும் காட்டுயிர்களினால் என்ன பயன்? காட்டில் வாழும் 

காட்டுயிர்களுக்கு ஏன் நாம் உணவு வழங்கக் கூடாது? 

குழந்தை வாங்கிய செம்மஞ்சள் நிற குல்லா... 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ வரலாறு..

குதித்து குதித்து ஓடிய குதிரையில் குழந்தை பயணித்த சவாரி...

காட்டிற்குள் ஏன் இவ்வளவு நெகிழி குப்பைகள்.... ஆங்கிலேயர் காலத்தில் பயிரிடப்பட்ட தைலம் மரம், பைன் மரம் ,சீகை மரங்கள் எப்படி புல்வெளி பகுதியை அழித்து சுற்றுச்சூழலை பாதித்தது..

இந்த மரங்கள் பயிரிட்டதன் மூலம் அழிந்து போன ஓரிட வாழ் உயிரினங்கள்....

இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கிறது கொடைக்கானல் குல்லா.

சூழியல் சார்ந்த, குழந்தைகளுக்கான அறிவியல் நூல் இது. குழந்தைகளுடன் பெற்றோர்களும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்களை பெற முடிவதோடு இனிமேல் செல்லும் சுற்றுலா தளங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் கற்றுத் தருகிறது. 

மிக அருமையான வண்ண ஓவியங்கள் இடம் பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும்.

 இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த இந்த நூல் உதவிடும் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் ஏன் அனைவர்களும் வாசிக்க வேண்டிய மிக அருமையான நூல்.

*"கொடைக்கானல் குல்லா"*

நூலாசிரியர்: 

*பா. சதீஷ் முத்து கோபால்*

விலை : ரூபாய் 150

புத்தகத்தை தபாலில் பெற : +91 95001 25125

MJ. பிரபாகர்




Post a Comment

0 Comments