இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற எழுத்தாளர்கள் விழாவிற்கு உலகெங்கும் இருந்து பல்வேறு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "நம் இயற்கையும் இயல்புகளும்". தமிழ்நாட்டில் இருந்து திரு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டார். அவருடைய வருகை அறிந்து மிகவும் உற்சாகமானேன். திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களை பதினைந்து ஆண்டுகளாக அறிவேன் என்றாலும், அவருடைய சிங்கப்பூர் வருகை ஆர்வத்தை ஏற்படுத்தியது.
08.11.2024
திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களை வரவேற்க விமான நிலையம் சென்றேன். எழுத்தாளர் விழாவில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்ட திரு . பாண்டியன் அங்கே காத்திருந்ததார். பாண்டியன் தொல்லியல் துறையில் ஆர்வம் மிக்கவர். மூவருக்கும் இடையிலான உரையாடல் மகிழ்வாக இருந்தது. திரைப்படம், சூழலியல், தொல்லியல் என்ற மூன்று துறைகளிலும் எங்களிடையே நிலவிய உரையாடல் நீண்ட நேரம் நீடித்தது.
09.11.2024
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், கடல் நீர் மாசுபடுவதை பற்றியும், கடல் வாழ் உயிரினங்கள் அழிவை சந்திப்பதையும், நீரின் அவசியம் பற்றியும் குழந்தைகள் நாடகமாக நடத்திக் காட்டினார்கள். இந்த நாடகம் நடக்க இருப்பதை முதல் நாளே திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களிடம் கூறியிருந்தேன். ஆர்வத்துடன் கலந்து கொண்டார். குழந்தைகளின் நடிப்பை வியந்து பார்த்து ரசித்தார்.
"பசுமை எழுத்தும் வியனுலகும்" என்ற தலைப்பில் திரு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஒரு சிறப்பான உரை நிகழ்த்தினார்.
1962-ல் ரேச்சல் கார்ல்சன் எழுதிய Silent Spring பற்றி அவருடைய உரை தொடங்கியது. 1972-க்குப் பிறகு பசுமை இலக்கியம் எவ்வாறு உலகெங்கும் வளர்ந்து வந்தது என்பதையும், கடந்த இருபது ஆண்டுகளாக தமிழில் பசுமை இலக்கியம் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை பற்றியும் பேசினார். பசுமை இலக்கியம் வளர்வதற்கு முன்பே எழுதத் தொடங்கிய திரு. மா.கிருஷ்னண் அவர்களின் பங்களிப்பைப் பற்றிப் பேசினார். தன்னார்வம் கொண்டவர்கள் தமிழில் பசுமை இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியதையும், தமிழ் புனைவு இலக்கியத்திலும் பசுமை இலக்கியம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
திரு. சா. கந்தசாமி அவர்கள் எழுதிய சாயாவனம், திரு. சோ. தர்மன் அவர்கள் எழுதிய கூகை, திரு. பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய கூளமாதாரி, Poonachi, திரு. ஜோ டி குரூஸ் அவர்கள் எழுதிய ஆழி சூழ் உலகு, திரு. சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதிய சாயத்திரை, திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய காடு, ரப்பர், திரு. வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள் எழுதிய கடற்கோள் காலம் போன்ற பல புனைவு நூல்களையும் அதன் சிறப்புகளையும் பற்றிப் பேசினார்.
அது போலவே கட்டுரை இலக்கியத்திலும், பல சிறந்த பசுமை இலக்கிய நூல்களை சுட்டிக் காட்டினார். திரு. நக்கீரன் அவர்களின் படைப்புகள், அவருடைய எழுத்தின் சிறப்புகள் குறித்தும் பேசினார்.
மேலும் கவிதை இலக்கியம் பற்றியும் பேசினார். திரு. ஆசைத்தம்பி அவர்கள் எழுதிய கொண்டலாத்தி, நான் (பா.சதீஸ் முத்து கோபால்) எழுதிய தூவி ஆகிய நூல்களை குறிப்பிட்டு, பசுமை இலக்கியத்தில் கவிதைகளின் பங்கு என்ன என்று பேசினார். திரு. தேவதேவன், திரு. மௌன யாத்ரா, திரு. கலாப்ரியா போன்ற கவிஞர்கள் எழுத்தில் பசுமை இலக்கியம் வெளிப்படுவதையும் சுட்டிக் காட்டினார்.
பசுமை இலக்கியம் சார்ந்து நூல்களை வெளியிடும் காக்கைக்கூடு பதிப்பகத்தை பாராட்டினார். திரு. ரவீந்திரன் நடராஜன் அவர்கள் சிறந்த ஒளிப்படங்களை எடுத்து எழுத்தாளர்களுக்குத் தருவதையும் குறிப்பிட்டு பாராட்டினார். காடு, உயிர், பூவுலகு போன்ற பசுமை இலக்கிய இதழ்களையும் பாராட்டினார்.
திரு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் பேசி முடித்த பிறகு, கேள்வி நேரமும் இருந்தது. எழுத்தாளர் திரு. சிவானந்தம் நீலகண்டன் அவர்கள் நெறியாளராக கலந்து கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தினார். அதன் பிறகும், அன்று மாலை வரை அவருடன் உரையாடல் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
10.11.2024
Literary Skylines: Narratives of Urbanisation என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களோடு மேலும் சில ஆளுமைகள் பங்கேற்றனர்.
"இயற்கையும் தமிழிலக்கியமும்" என்ற தலைப்பில் மாணவிகளோடு ஒரு உரையாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார். காட்சிப்பிம்பம் பற்றிய ஒரு மாணவியின் கேள்விக்கு உற்சாகமாக பதில் அளித்தார்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பிறகும் வாசகர்களுக்கு பொறுமையோடு அவருடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். நிகழ்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமதி. மோகனப்பிரியா, செல்வி. லதா, திருமதி. ரமா, திருமதி. அழகு நிலா, திருமதி. இன்பா, திரு. பிச்சினிக்காடு இளங்கோ என பலரும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சிகளின் போது என்னுடைய மனைவியையும், மகனையும் அழைத்துச் சென்றேன். மிகவும் மகிழ்வான நிகழ்வுகளாக அமைந்தது, எழுத்தாளர்கள் விழா. நிறைய புதிய நண்பர்களையும் இந்த நிகழ்வுகள் அறிமுகப்படுத்தின.
12.11.2024
திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களை வழி அனுப்ப விமான நிலையம் சென்றிருதேன். அப்போதும், அவருடனான உரையாடல் உற்சாகமாகவே இருந்தது. திரைப்படங்கள் பற்றியும், தொல்லியல் பற்றியும், சூழலியல் பற்றியும் அவரிடம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. சித்த மருத்துவர் திரு. கு .சிவராமன் அவர்களின் காலச்சுவடு பேட்டியை பாராட்டிப் பேசினார். மெய்யழகன் திரைப்படம் பற்றி பல நேரங்களில் பேசினோம். திரு. ஞானக்கூத்தன் கவிதைகளை வாசிக்கச் சொன்னார். சிங்கப்பூரின் வரலாறு பற்றியும் நிறைய பேசினோம். நண்பர் பாண்டியனும், நானும் வழி அனுப்பி வைத்தோம்.
ஒரு வாரம் கழித்து பாண்டியனை சந்தித்த போதும், திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களுடைய வருகை பற்றிய பேச்சு எங்களுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அவருடைய பதிவு. திரு. சிவானந்தம் நீலகண்டன் அவர்கள் அவருடைய தளத்திலும் ஒரு சிறப்பான கட்டுரை எழுதி இருக்கிறார்.
2 Comments
Nice arrangements... Forwarded in my FB page and groups.. வாழ்க வளமுடன்.
ReplyDeleteThank you 😊
ReplyDelete