ஐ பாம்பு - திரு. விஸ்வா நாகலட்சுமி

சூழலியல் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும், தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய பல்வேறு முயற்சிகளை கையாள்வார்கள். சூழல் மீதான அக்கறையை, அவர்களின் செயல்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். சூழல் குறித்த புரிதலும், அதை பாதுகாக்க வேண்டும் என்ற உந்துதலும் ஒருவர் மனதில் வந்துவிட்டால், அவருடைய செயல்பாடுகள் ஏதோ ஒருவடிவத்தில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.




இன்று நமக்கிருக்கும் சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை பட்டியல் போட முடியாத வண்ணம் அவை வளர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பல்வேறு உயிரினங்கள் உலகெங்கும் மிக வேகமாக அழிவை சந்தித்து வருகின்றன. அதில் குறிப்பாக பாம்புகள் அதிக அளவில் பல்வேறு காரணங்களால் அழிவை சந்திக்கின்றன. நண்பர் விஸ்வா ஒரு களப்பணியாளர். பாம்புகளை மீட்பதில் அதிக அக்கறை கொண்டவர். யாரும் எளிதில் செய்யத் துணியாத பணியை விருப்பத்துடன் செய்து வருபவர். பாம்புகள் பற்றிய அவருடைய புரிதலும், பாம்புகளை பற்றி அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய எழுத்துகள் வழியே வெளிப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 



முறையான பயிற்சியோடும், தெளிவான புரிதலோடும் பாம்புகளை அணுகுவதே சிறந்தது. அந்த வகையில், அவருடைய தனிப்பட்ட அனுபவமும், அவருடைய அணுகுமுறைகளும், பாம்புகளைப் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த நூல் உதவும் என்று நம்புகிறேன். தமிழ் நாட்டில் காணப்படும் பல பாம்பினங்களை இந்த நூலில் வண்ணப்படங்களோடு விளக்கியிருக்கிறார். 

மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளை தொகுத்தால் தனியாக ஒரு நூலே எழுதலாம் என்று என்னும் அளவுக்கு அவ்வளவு செய்திகளை அவர் சேகரித்துக் கொடுத்திருக்கிறார். ஒரு அறிவியல் சார்ந்த நூலில் மூட நம்பிக்கைகள் எதற்காக சொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த நூலுக்கு அது மிகவும் அவசியம் என்றே நினைக்கிறேன். எது சரி என்று சொல்லும்போது, எது தவறு என்ற விளக்கத்தையும் சேர்த்தே தருவதன் மூலம், ஒரு சிறந்த மாற்றத்தை மக்களிடையே முன்னெடுக்க முடியும். 

ஒவ்வொரு பாம்பினத்திற்கும் உண்டான பெயர்க் காரணம் என்ன, அதன் அறிவியல் பெயர் ஏன் உருவானது, அதன் வாழிடம் எது, மக்களிடையே நிலவும் குழப்பங்கள் என்ன, அந்த பாம்பினம் எத்தனை குட்டிகள் ஈனும், அதை பார்த்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஏராளமான தகவல்களை சொல்லி இருக்கிறார்.

எல்லாவற்றையும் விட முக்கியம், எந்தெந்த பாம்பினங்கள் நஞ்சு உடையவை என்ற விளக்கமும் அருமை. நஞ்சு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவற்றை எப்படி கையாள வேண்டும் என்ற புரிதலை நமக்கு உணர்த்துகிறார். 'ஐயோ பாம்பு' என்று அஞ்சும் நம் மக்களை 'ஐ பாம்பு' என்று சொல்ல வைக்கும் முயற்சியே இந்த நூல். 

நண்பர் விஸ்வா அவர்களின் பணி சாதாரணமானது அல்ல. மிகவும் சவாலானது. பாம்புகளை கையாள்வது எப்படி சவாலானதோ, அது போலவே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சவாலானது. இரண்டு சவால்களையும் ஏற்றுக் கொண்டு, களப்பணியோடு, எழுத்துப்பணியிலும் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். 

மூட நம்பிக்கைகளை உருவாக்குவது எளிது. அதை உடைப்பது மிகவும் கடினம். ஆனால் அது காலம் கடந்து நிற்கும். சூழலையும் காக்கும். 'ஐ பாம்பு' அப்படியான ஒரு முயற்சி . .!!

காக்கைக்கூடு பதிப்பகத்தில் இந்த நூல் வெளியாகியுள்ளது.

இந்த நூலை இணைய வழியிலும் வாங்கலாம் : ஐ பாம்பு


Post a Comment

2 Comments

  1. தங்களின் மேலான கருத்துக்கள் வழங்கி மேலும் என்னை எழுதுவதற்கு உற்சாகப் படுத்தியமைக்கு நன்றி🙏🙏🙏அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. தொடந்து எழுதுங்கள்.

      Delete