ஆனை மலை - திரு. பிரசாந்த் வே

"ஆனை மலை" நாவல் ஒரு புதிய முயற்சி. நூல் ஆசிரியர் திரு. பிரசாந்த் வே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாவலை ஒரு உரையாடலுக்கான தொடக்கமாகவே நான் பார்க்கிறேன். பழங்குடி மக்களின் பிரச்சனைகள் இன்று நேற்றல்ல. அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த பல பிரச்சனைகளையும் இந்த நாவல் பேசுகிறது. 


ஆங்கிலேயர்கள் பொழுதுபோக்குக்காக வேட்டையாடி காட்டை அழித்தது தொடங்கி,  வளர்ச்சிக்காக மரங்கள் வெட்டப்பட்டு காட்டை நாசம் செய்தது, தேயிலை பயிருக்காக காட்டை சீரமைத்தது என காடும், காட்டை நம்பி வாழ்ந்த மக்களின் துயரத்தையும் பக்கத்துக்கு பக்கம் பேசுகிறது இந்த நூல். 

இந்திய விடுதலைக்குப் பிறகும் கூட, நீர் மின் திட்டங்களுக்காக, வேளான்மையை பெருக்க அணைகள் கட்டப்பட்டது, புலிகள் காப்பகங்களுக்காக என பல்வேறு சூழலில் பழங்குடியினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை இந்த நாவல் பேசுகிறது. 

இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் திரு.பிரசாந்த் அவர்களின் உழைப்பு தெரிகிறது. அவர் இந்த நாவலுக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை வாசிக்கும் போது நன்கு உணர முடிகிறது. கருத்து மாறுபாடுகள் கூட இருக்கலாம். ஆனால் அவருடைய உழைப்பு எழுத்தாக வெளிப்படுகிறது என்பதே உண்மை. 

மக்களின் மொழியிலேயே அவர் பேசியிருப்பது நாவலுக்கு கூடுதல் சிறப்பு. ஆங்கிலேயர்களால் காடழிப்பு நிகழ்ந்தாலும், ஹியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரூ வுட் செய்த காரியங்களை கதையோடு இணைத்து சிறப்பு. அது போலவே, தற்கால அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனக் கூறியிருந்தாலும், வனப் பணியாளராக வரும் இளன் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறார். 

பழங்குடி மக்களுக்கு எவ்வளவு செய்தாலும், அவர்கள் இத்தனை ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக சந்தித்த பிரச்சனைகளை ஈடு செய்ய அரசால் முடியாது. அவர்கள் கடந்து வந்த துயர வாழ்வு அத்தகையது. அவர்களுக்கு அரசு செய்ய வேண்டிய நீதி என்பது, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வது தான். 

மனிதர்களால் அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசு என்பது மக்களுக்கு மட்டுமல்ல. காடுகளுக்கும், காட்டில் வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்தேதான். அப்படிப்பட்ட காடுகளை இத்தனை ஆண்டுகளாக காத்து வந்ததில் பழங்குடிகளுக்கும் பெரிய பங்கு உண்டு தானே. 

அவர்களின் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு வரும் வளர்ச்சி, எப்படி நியாயமானதாக இருக்கும் என்ற கேள்வியை ஆழமாக எழுப்புகிறது "ஆனை மலை".

Post a Comment

0 Comments