2011-ஆம் ஆண்டு பழனி அருகே இருக்கும் கொங்கூர் குளத்தில், ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். மக்களை சந்தித்து பறவையினங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், கொங்கூர் குளத்திற்கு வரும் பறவைகளின் படங்கள் அச்சிட்ட துணிப்பைகளை வழங்குவதும் நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் திரு.கோவை சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டது சிறப்பு.
இறகுதிர் காலம் நூலில் அந்த நிகழ்ச்சி பற்றிய குறிப்புகளை பத்து வருடங்களுக்கு முன்பே பார்த்து மகிழ்ந்தேன். திரு.கோவை சதாசிவம் அவர்களின் ஒவ்வொரு நூலுக்கும், என்னுடைய இணையதளத்தில் வாசிப்பனுபவத்தை எழுதுவேன். ஆனால் இந்த நூல் பற்றி எப்படியோ எழுதாமல் இருந்துவிட்டேன்.
காலதாமதம் ஆனாலும் "இறகுதிர் காலம்" நூலின் தேவை முன்பை விட தற்போது அதிகம் என்றே தோன்றுகிறது. நூலாசிரியர் எச்சரித்த எதுவும் மாறவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முதல் பருவநிலை பிறழ்வு வரை எதிலும் முன்னேற்றமில்லை.
ஈமு கோழிகளை வைத்து நடத்திய மோசடிகள் மட்டுமின்றி அவற்றின் வாழிடத் தகவல்களை சேர்த்தே கொடுத்திருக்கிறார். திருப்பூர் நஞ்சராயன் குளம், பழவேற்காடு ஏரி போன்ற பகுதிகளில் வந்து செல்லும் பறவைகள், அவை சந்திக்கும் சிக்கல்கள் என நீள்கிறது இந்த நூல்.
பறவைகள் பற்றி புதிதாக வாசிக்க வருபவர்கள், இந்த நூலை வசிக்கும் முன்பாக திரு.கோவை சதாசிவம் அவர்கள் எழுதிய "ஊர்ப்புறத்துப் பறவைகள்" நூலை வாசித்தல் நலம். வீட்டைச்சுற்றி என்ன இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
காக்கைக்கூடு இணையதளத்தில் இந்த நூலை வாங்கலாம்.
0 Comments