திருமதி.ச.மோகனப்பிரியா அவர்கள் எழுதிய "ஞாபகப் பெருங்களிறு" என்ற கவிதை நூலை வாசித்தேன். சிங்கப்பூரின் வாழ்வியலையும், இந்தியாவின் நினைவலைகளையும் ஒருங்கே கவிதைகளாக தொகுத்திருக்கிறார். இது இவருடைய முதல் நூல் என்றே நம்பமுடியாதபடியான மிக ஆழமான கவிதைகள்.
சில கவிதைகளை என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. நாம் சாதாரணமாக கடந்து செல்பவற்றை ஒரு கவிஞரால் இலக்கியமாக மாற்ற முடியும். அதை மோகனப்பிரியா அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார். எனக்கு அவருடைய மைனா கவிதை மிகவும் பிடித்தது. சற்றே தள்ளி அமர்ந்த மைனாவின் இயல்புக்கு, குற்றவுணர்வை வெளிப்படுத்துவது பேரன்பு.
மேஜையில் வழிந்தோடும் தண்ணீரை கவிதையாக்குகிறார். அது கவிதை அல்ல. அருவி. மனிதனுடைய பார்வையில் இருந்து கவிதை எழுதுவது ஒரு வகை. ஆனால் சில கவிதைகள் மனிதனின் பார்வைக்கு அகப்படாதவை. மனிதனின் கற்பனை கோணத்தில் சிக்காத உலகத்தை எழுத்தால் வடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
இந்த கவிதைகள் பல புதிய வார்த்தைகளை கற்றுக் கொடுக்கிறது. ஒரு கவிஞனாக எனக்கு இந்த நூல் எனக்கு மிகப்பெரிய உதவி செய்கிறது. சொற்களை தேடி அலையும் கவிஞர்களுக்கு அந்த வலி புரியும். கரோனா பெருந்தொற்றை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கவிதை அற்புதம். "இருளில் அச்சமூட்டும் அருகாமை" என்ற கவிதை, மனிதத் தலைகளை, காந்தத்தினால் வெடவெடத்து நிற்கும் இரும்புத் துகள்களோடு ஒப்பிடுகிறது. இப்படி ஒரு சிந்தனையை வாசித்ததே இல்லை.
அவருடைய அடுத்த கவிதை நூல், "ததும்புதலின் பெருங்கணம்" நேற்று, டிசம்பர் 1-ஆம் தேதி, 2024-ல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
கவிதை நூல்களைப் பெற : ஞாபகப் பெருங்களிறு
0 Comments