கொடைக்கானல் குல்லா - வாசிப்பனுபவம் 4 - திரு. பாரதிதாசன்

அருளகம் திரு. பாரதிதாசன் அவர்களின் வாசிப்பனுபவம்.

அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி..!!

**********

பா. சதீஷ் முத்து கோபால் எழுதிய ‘கொடைக்கானல் குல்லா’ நூலை வாசிக்கும் நல்வாய்ப்புக் கிடைக்கப்பெற்றேன். புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படத்தின் வடிவமைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நூலை வாசிக்க வாசிக்க நாமும் கோடைக்கானல் மலைக்குச் சுற்றுலா அழைத்துச்செல்வது போல இருந்தது. சில ஆண்டுகளாக அங்கு செல்ல எனக்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. இந்த நூலை வாசித்தபோது நான் சென்று வந்து இடங்களையும் மெல்ல நினைவூட்டி இரசித்தேன். இந்நூலில் பல்லுயிர்ச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை சிறுவர்கள் மூலம் பெரியவர்களுக்கு உணர்த்தும் விதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் சூழல் சீர்கேட்டையும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் நுட்பமாக உரையாடல் வழியே இழையோட விட்டிருந்தார். குறிப்பாக ஆற்றில் கலக்கும் கழிவுகள், வனவிலங்குகளுக்குத் தீனி போடுவதால் நேரும் தீங்கு, நொறுக்கு தீனி பொதியப்பட்ட நெகிழிப்பையைத் தூக்கி எறியாமல் பத்திரமாக எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொண்ட கதை மாந்தரின் பக்குவம், அயல் தாவரங்களின் தாக்கம், குப்பைகளால் காட்டுக்கு நேரும் அச்சுறுத்தல், சத்தமாக பாடல்கள் கேட்பதால் நேரும் தொல்லை, புல்வெளிகள் அழிவு, வரையாடுகள் மறைவு உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களையும் பேசு பொருளாக்கியிருந்தது வெகு சிறப்பு. கதை மாந்தர்கள் பெயர், யாழினி, கயல், கண்மணி ஆகா.. மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. கூடவே பறவைகள் பெயரையும் செடிகள் பெயரையும் குறிப்பிட்டது வெகு சிறப்பு. வண்ணப் படங்கள் அருமை. நூலைச் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருந்தது கூடுதல் சிறப்பு. இந்த நூல் குறித்து ஒரே ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று சொன்னால் கதை மாந்தர்கள் மகிழுந்தில் செல்லாமல் பேருந்தில் சுற்றலா செல்வது போல் அமைத்திருந்திருக்கலாம்.


சுட்டி யானை வெளியீடாக வெளிவந்த நூலைப் புத்தாண்டு பரிசாக குழந்தைகளுக்கும் கூடவே பெரியவர்களுக்கும் வழங்கலாம்.

Post a Comment

0 Comments