மருத்துவர் திரு. விக்ரம் குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...!!
கொடைக்கானல் குல்லா
எந்த ஒரு புத்தகம் கையில் கிடைத்தாலும் முகர்ந்து பார்த்து குதூகலமடையும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம்! சிறுவயது முதலே எனக்குள் இடைவிடாமல் தொற்றிக்கொண்ட ஆரோக்கிய தொற்றுவியாதி இது! அவ்வகையில் கொடைக்கானல் குல்லா புத்தகம் கையில் கிடைக்க… அதை முகர்ந்து பார்க்க… காகித வாசனையோடு கலந்துவிட்ட மேகங்களின் வாசனை!
சில மாதங்களுக்கு முன்பு தான் கொடைக்கானல் பயணப்பட்டிருந்ததால், ஆசிரியர் சதீஸ் முத்துகோபாலின் எழுத்துகள் வெண்பனியாய்க் கண்கள் முன் விரிந்தன! ஆறுகளின் சங்கமம் குறித்து பேசுகிறார்… குரங்குகளுக்கு உணவுக் கொடுத்து மலைச்சாலைகளில் சங்கமிக்க வைக்க வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார்… தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் நுரையாய் சங்கமிப்பதை வருத்தத்தோடு பகிர்ந்துகொள்கிறார்…. நெகிழிக் குப்பைகள் மண்ணுக்குள் சங்கமமாவது குறித்து காத்திரமாகச் சொல்கிறார்… இப்படி சுற்றுச்சூழலின் அத்தியாவசத்தை சிறார்களுக்குள் சங்கமிக்க வைக்கும் அற்புதமான சிறார் நூல் இது!
சுற்றுச்சுழல் பார்வை:
அரை மணி நேரத்தில் கொடைக்கானல் முழுவதும் சுற்றிப் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது புத்தகம். பூம்பாறையைப் பற்றி இறுதியில் தொட்டுச் சென்றது சிறப்பு! அருவி… ஆறு… அதில் நெகிழி… சூழல் மீது அக்கறைக் கொண்ட எழுத்து! பறவைகளைப் பல இடங்களில் அறிமுகப்படுத்துகிறார்… ஓரிட வாழ்விகள் குறித்து பேசுகிறார்… உங்கள் குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் குறித்து அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா… அப்போது இந்தப் புத்தகத்தைக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள்… கூடவே கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லுங்கள்!
கதையைப் படிக்கும் போது சில்லெனும் பனிக்காற்று நம் மீது படர்வதைப் போன்ற ஓவியங்கள்! ஓவியம் வரைந்த ஜீவாவுக்கு வாழ்த்துகள்! சிறப்பாக வடிவமைத்த மதனுக்கும் புத்தகத்தை வெளியிட்ட இயல்வாகைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!
குல்லா:
கொடைக்கானல் குல்லா என்று பெயர் வைத்துவிட்டு, குல்லாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என்று சிந்திக்கும் போது, புத்தகத்தின் கடைசி வரியில் செண்டிமெண்ட் கலந்து குல்லாவின் முக்கியத்துவத்தை நட்பாகச் சுட்டிக்காட்டுகிறார்! கொடைக்கானல் குல்லா… சிறார் மட்டுமல்ல பெற்றோர்களும் படித்து ரசிக்க வேண்டிய புத்தகம்!
அன்பும் வாழ்த்துகளும் ஆசிரியர் சதீஸ் முத்து கோபால் அவர்கள்!
-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
0 Comments