சின்னஞ்சிறு தேன்சிட்டு
சிறகசைத்து வருகிறது - அது
சின்னஞ்சிறு பூக்களிலே
தேனருந்தி மகிழ்கிறது.
மிளகளவில் இதயமதற்கு
மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு
போதுமென்ற மனமதற்கு
செந்தமிழில் பேரதற்கு
இணை பிரியா தேன்சிட்டுகள்
இன்பமுடன் வாழ்ந்திருக்கும்.
ஆணெதுவோ பெண்ணெதுவோ
மிக எளிதில் அறிந்திடலாம்.
தேனருந்தும் ஆண்சிட்டு
காதலை சிந்திச் செல்கிறது.
காத்திருக்கும் பெண்சிட்டு
பூப்பூவாய் பூக்கிறது.
இணை சேர்ந்த பின்னாளில்
பூத்த மரங்கள் காய்க்கிறது.
புத்தாடை உடுத்துவதால்
புத்துணர்ச்சி மனிதருக்கு
பூக்களின் மலர்ச்சியினால்
புத்துணர்ச்சி சிட்டுக்கு.
பல்சுவையில் பலகாரம்
நாஊறும் மனிதருக்கு
பல நூறு பூக்களிலும்
தேன்போதும் சிட்டுக்கு.
புதுப்படங்கள் பார்ப்பதிலே
ஆர்வமுண்டு மனிதருக்கு
புதர்நடுவே கூடமைக்கும்
வாழிடமே சிட்டுக்கு.
தொலைக்காட்சியில் பட்டிமன்றம்
பொழுதுபோக்கு மனிதருக்கு
தேன்சிட்டு பாடும் பாடல்
கவிமாலை பூக்களுக்கு.
உறவோடும் நட்போடும்
மகிழ்வுண்டு மனிதருக்கு
முட்டையிட்டு அடைகாத்தல்
பேரின்பம் சிட்டுக்கு.
தீபாவளி திருநாளில்
இவை எல்லாம் மகிழ்வதற்கு
பட்டாசுகள் வெடிப்பதினால்
பலனுண்டா சிட்டுக்கு ?.
வானெல்லாம் ஒளிக்கீற்று
வேடிக்கை பார்ப்பதற்கு
இரவெல்லாம் உறக்கமின்றி
அச்சமுறும் தேன்சிட்டு.
வீதியெங்கும் வெடியோசை
கொண்டாடித் தீர்ப்பதற்கு
இதயத்துடிப்பு நின்றிடுமோ
அடைகாக்கும் சிட்டுக்கு ?
ஊரெல்லாம் புகைவாசம்
யாரெல்லாம் பொறுப்பதற்கு
விடிந்தபின்னும் வெடிச்சத்தம்
தேனருந்த யார்வருவார் ?
குருவிகளை நேசித்த
மகாகவி பாரதியும்
பல்லுயிர் போற்றிய
வள்ளுவப் பெருந்தகையும்
சொல்லிச்சென்ற தமிழ்மரபில்
பண்டிகைகள் எதற்காக
மானுடம் மகிழ்ந்திடவா
புள்ளினங்கள் செழித்திடவா ?
ஈ எறும்புகள் பிழைத்திருக்க
அரிசிமாவில் கோலமிட்டும்
தைமாதம் பொங்கலிட்டு
மாடுகளுக்கு படைத்திட்டும்
சொல்லிச்சென்ற தமிழ்மரபில்
பண்டிகைகள் எதற்காக
மானுடம் மகிழ்ந்திடவா
பல்லுயிர்கள் பெரிகிடவா ?
தீப ஒளித் திருநாளில்
உறவோடு மகிழ்ந்திருப்போம்
மத்தாப்பு சிரிப்போடு
மழலைகள் போல் நாமிருப்போம்.
புதுத்துணியை உடுத்திவிட்டு
வீதிகளில் வலம்வருவோம்.
பலகாரம் உண்டுவிட்டு
படுத்துறங்கி ஓய்வெடுப்போம்
திகட்டாத இன்பங்கள்
இத்தனையும் துணையிருக்க
தேடிவரும் தேன்சிட்டு.
பட்டாசு நமக்கெதற்கு ?
தேன்சிட்டில் சிறப்பினங்கள்
உலகெங்கும் பல உண்டு
செந்நிறத்தில் தேன்சிட்டு
சிங்கைக்கு அடையாளம்
எத்திசையும் பூவுலகில்
எங்கெங்கும் புள்ளினங்கள்
இன்பமுற கொண்டாட
தீபாவளி வாழ்த்துகள்..!!
*சிங்கப்பூர் கவிமாலையில் பேசிய கவிதை.
1 Comments
வாழ்த்துகள் ❤️
ReplyDelete