காந்தியின் நிழலில் - திரு. எஸ். ராமகிருஷ்ணன்

காந்தியை எத்தனை முறை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை பேர் இணைந்திருந்தனரா என எண்ணிப் பார்க்கும் போதே ஆச்சர்யமாக இருக்கும். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரின் விழுதுகளாக வேரூன்றி மரமாகி மேலும் மேலும் விருட்சமாகிக் கொண்டே இருக்கிறார். ஒரு எளிய மனிதனின் வாழ்வில் இத்தனை ஆச்சர்யங்களா ? 

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய "காந்தியின் நிழலில்" வாசித்தேன். அவருக்கு காந்தியின் மீது இருக்கும் ஈர்ப்பை நான் நன்கறிவேன். அவருடைய எழுத்துகளின் வழியே காந்தியின் வாழ்வை திரும்பிப்பார்ப்பது ஒரு பேரனுபவம். காந்தியைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் மூலம், நமக்கு காந்தியை இன்னும் நெருக்கமான மனிதனாக்குகிறார். காந்தியை வெறுப்பவர்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் காந்தியை புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. இந்த நூல் காந்தியை வெறுப்பவர்களிடமும் மாற்றத்தை நிகழ்த்தக் கூடியது. ஏனென்றால் ,  இது காந்தியை மையப்படுத்திய நூல் மட்டுமல்ல. காந்தியின் வழியே நம் மனசாட்சியை தொட்டுப் பார்க்கும் நூல். அது வாசிப்பவர்களுக்கு காந்தியத்தை உணரச் செய்யும். 

நம்மைச் சுற்றி இருக்கும் பேரதிசயங்களை உணர்ந்தவராக இருக்கிறார் காந்தி. பேரருவிகளை விடவும் மழையின் அதிசயத்தை உணர்ந்ததாலேயே அவர் மனித மனங்களை புரிந்துகொள்ளும், பேராற்றல் உள்ளவராக இருந்திருக்கக்கூடும். உண்மையும் அறமும் மட்டுமே காந்தியின் அடையாளங்கள் அல்ல. அவரிடம் ஒரு பிடிவாதமும் துணிவும் இருந்தது என்பதை உணரச் செய்கிறது இந்த நூல். பெண்கள் எப்படி காந்தியின் பின்னால் சென்றார்கள், காந்தி எப்படி எல்லா மக்களையும் சென்றடைந்தார் என காந்தியை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள இந்த நூல் நிச்சயம் உதவும். 

மஹாதேவ தேசாய், காந்திக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதையும், அவருடைய மறைவில் காந்தி எவ்வளவு துயருற்றார் என்பதையும் வாசிக்கும் போது, காந்தியின் வாழ்வில் அவர் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர முடிகிறது. சாப்ளினுடன் காந்திக்கு நடந்த உரையாடல்,  அதை ஒட்டி லண்டனில் நடந்த நிகழ்வுகள் என ஒவ்வொன்றையும் தன் எழுத்தின் வழியே காட்சிகளாக கொண்டுவந்து நிறுத்துகிறார் எஸ். ரா. காந்தியைச் சுற்றி இருந்த மனிதர்களையும் தாண்டி, அவர் பயன்படுத்திய பொருட்களின் பின்னே உள்ள வரலாற்றுத் தகவல்களையும் நமக்குத் தேடித்தருகிறார். எவ்வளவு பெரிய உழைப்பு. இந்த உழைப்பு தான் எஸ். ரா அவர்களின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டுகிறது. காந்தியின் கைத்தடி, ராட்டை, கடிகாரம் என அவரைச் சுற்றி இருந்த எளிமையான பொருட்களின் பின்னே எவ்வளவு ஆழமான அரசியல். "காந்தியிடம் திருட என்ன இருக்கிறது? அவரின் சிரிப்பைத் திருடவே முடியாது" என்னும் இடத்தில், ஒரு முறை அட்டைப் படத்தை பார்த்துக் கொண்டேன். ஆம் எஸ். ரா சொல்வது எவ்வளவு பெரிய உண்மை. காந்தியின் வாழ்வை ஒரே வரியில் விளக்க வேண்டுமானால் நான் இந்த வரியைத் தான் மேற்கோள் காட்டுவேன். 

நூலில் இணைக்கப்பட்டிருக்கும், "ஐந்து வருட மௌனம்" என்பது புனைவு போலவே இல்லை. இப்படி ஒரு புனைவு வேறு எந்த மொழியிலாவது எழுதப்பட்டிருக்கிறதா ? ஏன் தமிழர்களுக்கு காந்தி இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் ?  காலம் செல்லச் செல்ல அந்த நெருக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே, எப்படி ? காந்தியை புரிந்து கொண்டவர்களுக்கு, இந்த புனைவின் வழியே, காந்தியைப் பற்றிய பல கேள்விகளுக்கு எஸ். ரா பதில் சொல்கிறார். 

காந்தியை புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு தலைமுறை உருவாகி வருவதையும் வருத்தத்துடன் எஸ். ரா பதிவு செய்கிறார். அவருடைய வருத்தத்தை போக்கும் மருந்தாக, இந்த நூல் நிச்சயம் இருக்கும். மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மருந்தை தாங்களே எடுத்துக் கொள்வது போல.

Post a Comment

0 Comments