இதயம் தொட்ட எழுத்துகள் - திரு.எ.யோசுவா - பறவைகளின் உயிர்ச்சூழல் - வாசிப்பனுபவம்

ஒரு கவிதை நூலை எழுதி வெளியிடுவது என்பது அவ்வளவு சாதாரனமானது அல்ல. அதற்கு மிகப்பெரிய உழைப்பு தேவைப்படுகிறது. அதிலும் பறவைகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக எழுதுவதற்கு பின்னால், மிகப்பெரிய வலி இருக்கிறது. என்னுடைய கள அனுபவங்கள், நான் வாசித்த புத்தகங்களில் இருந்து பெற்ற அனுபவங்கள், பறவைகளை தேடிப்போய் பார்த்து அதில் பெற்ற அனுபவங்கள் இவை எல்லாம் சேர்ந்து,  அவற்றின் மூலம் நான் பெற்றுக் கொண்ட அறிவை, மிக அளவான வார்த்தைகளைக் கொண்டு வலியோடு கடத்துவது மிகவும் கடினமான பணி. 

மென் பொருள் துறையில் இருந்து கொண்டு,  குடும்பப் பொறுப்போகளோடு இப்படி எழுவது எனக்கு அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் அதை செய்திருப்பதால் மிகப்பெரிய மன நிறைவு உண்டு. நான் கவிதை எழுத எடுத்துக் கொண்ட நேரம் உங்களை ஆச்சர்யப்படுத்தலாம். பயணங்களில் கூட கண்களை மூடி அமர்ந்து, வார்த்தைகளை கோர்க்கத் தொடங்கிவிடுவேன். என்னைச் சுற்றி பரபரப்பாக ஒரு உலகம் இயங்கி கொண்டிருப்பதை உணராமல், என் மனத்திரையில் பறவைகளை கவிதைகளாக மாற்றிக் கொண்டிருப்பேன். 

இத்தனை வலிகளையும், புத்தகத்தை வாசித்துவிட்டு ஒருவர், உற்சாகப்படுத்தும் போது கடந்துவந்த கடினமான பாதைக்கு அது மருந்தாகிவிடுகிறது. இன்று நண்பர் யோசுவா கொடைக்கானலில் இருந்து அனுப்பியிருந்த இந்த வாசிப்பனுபவத்தை பார்த்ததும், நெகிழ்ந்து போனேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. கவிதைகளை வாசித்துவிட்டு,  தன் அனுபவங்களை கவித்துவமாகவே கொடுத்திருக்கிறார். 

" பறவைகளின் உயிர்ச்சூழல்" நூலை வாசித்துவிட்டு ,  நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.  எழுகிறவனுக்கு வேறு என்ன வேண்டும் . .!!

-------------------------------------------------------------------------------


பறவைகளை பார்க்கும் போது ஏற்படும் ஆவலே, பறவைகளின் உயிர்ச்சூழல் புத்தகத்தை நான் வாசிக்கும் போது இருந்தது. ஏதாவது இரண்டு மூன்று கவிதைகள் மனதிற்கு நெருக்கமாக வரும் என்று தான் எண்ணினேன். அறுபத்தி இரண்டில் ஏறக்குறைய ஐம்பது கவிதைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இந்த புத்தகம் பறவைகள் பற்றிய கவிதை புத்தகம் மட்டும்மல்ல, காடழிப்பு, காலநிலை பிறழ்வு, கட்டிடப் பெருக்கம், என அனைத்தையும் பேசுகிறது. இந்த புத்தகத்தில் என்னை கவர்ந்த பல கவிதைகளில் சில: விசிறிவால் குருவி , பூஞ்சைப் பருந்து, தீக்காக்கை.

தீக்காக்கை கவிதையை பறவையே எழுதியது போல இருந்தது. ஆறுமணிக்குருவியில் வானவில்லை காட்டிலும், உங்கள் வார்த்தை அதிக வண்ணம் கொண்டிருந்தது. சுண்டாங்கோழி அனைவருக்கும் ஓவியம் வரைய கற்றுக்கொடுக்கும் விதம் அழகு. அடுத்து சில  கவிதைகள் தாண்டி  ஆவாரம் பூ ஆள்காட்டி  எல்லோரையும் திகைக்க வைக்கிறது. செங்குயில் அற்புதம். சிட்டாய் மறைந்த சோலைக்குருவி அருமை . 

கானாங்கோழியும், காட்டுக்கோழியும் என் நேரடி அனுபவங்களாக தோன்றியது. மீண்டும் ஒருமுறை படித்த போதுதான் புரிந்தது கானாம் கோழியின் பெயர் காரணம். முன்னர் காடுகளில் இருந்தோம், பிறகு காடுசூழ இருந்தோம் என்னும் வரிகள் வண்ணத்திக்குருவிகளால் வாசல் அழகாகிறது. கண்சிமிட்டாமல் படித்தேன் மஞ்சள் குருகுவை.

ஆகசிறந்த கவிதை இந்த கெளதாரி: அதிக தூரம் பறக்காத கெளதாரிகள் கூண்டிலிருப்பதால் குறையொன்றுமில்லை எனச் சொன்ன நண்பரிடம் கேட்கிறேன் , உங்களுக்கும் பறக்க தெரியாது தானே..... கடைசியில் கண்ணில் ஈரம் கசிந்தது ஆற்று ஆலாவால்.  இன்னும் சில................தூவி அழகு . பறவைகளின் உயிர்ச்சூழல் பேரழகு.... அடுத்த அறுபத்தி இரண்டு பறவைகளையும் ஆவலோடு எதிர்பார்கிறோம். வாழ்த்துக்கள் சார் ✨✨

Post a Comment

1 Comments