பறவைகளின் உயிர்ச்சூழல் - எழுத்தாளர் ஜி.சிவக்குமார் வாசிப்பனுபவம்

ஆழமான உங்கள் வாசிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. எத்தனை நன்றிகள் சொல்வதெனத் தெரியவில்லை. உங்கள் வார்த்தைகள் தொடர்ந்து எழுத ஊக்கம் அளிக்கிறது. எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்..!!

---------------------------------------------------



பறவைகளின் உயிர்ச்சூழல் 

பா சதீஸ் முத்து கோபால் 

பறவைகள் சூழலியல் - கவிதைகள்

காக்கைக் கூடு பதிப்பக வெளியீடு 

விலை ரூபாய் 100


பறவைகள் ஆர்வலரும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமாகிய 

பா.சதீஸ் முத்து கோபாலின் ஐந்தாவது புத்தகம் இது.

மாங்குயில், செங்குதச் சின்னான், கள்ளிப் புறா, கௌதாரி, சாம்பல் நாரை இப்படி நாம் அதிகம் அறிந்த பறவைகளோடு, சீழ்க்கை சிறகி, பட்டாணி உப்பு கொத்தி, துடுப்பு வால் கரிக்குருவி, சுடலைக் குயில் போன்ற அறிந்த பறவைகளோடு, தீக்காக்கை, பழனி மலை சோலைக்குருவி, செங்கிழுவை, விசிறிவால் குருவி, கானமயில் போன்ற அறியாத பறவைகள் என 62 பறவைகளின் அழகான புகைப்படங்களோடு அந்தப் பறவைகள் குறித்தான கவிதைகளையும் பதிவு செய்துள்ளார். அதோடு நம் சிந்தனையைத் தூண்டுகிற சூழலியல் சார்ந்த கவிதைகளையும் பதிவு செய்துள்ளார்.

பொதுவாக பறவைகள் மனிதர்களிடமிருந்தும் பிற எதிரிகளிடமிருந்தும் தங்கள் முட்டைகளை காப்பாற்றுவதற்காக பாதுகாப்பான இடங்களிலேயே கூடுகளை அமைக்கும். ஆனால் செங்குதச்சின்னான், மனிதர்களுக்கு அருகாமையில் கூடுகளை அமைக்கிறது என்பதை எத்தனை அழகாக சொல்லுகிறார் பாருங்கள்.

பூக்களைக் கொய்கிற 

கைகளெனத் தெரிந்தும்

மல்லிகை பந்தலில் கூடமைக்கிற 

சின்னான் குருவிகளின் 

கிண்ண வடிவக் கூட்டில்

 நிறைந்திருக்கிறது 

கூடுதல் நம்பிக்கை.

அற்புதமான உரு மறைப்பின் வழி தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன பறவைகள்.. கல் குருவி குறித்த

இந்தக் கவிதையைப் பாருங்கள்.


புற்கள் முளைத்த பாலை நிலத்தில் 

தத்தித் தாவும் வெட்டுக்கிளிகள் 

சரளைக் கற்கள் சிதறிக் கிடக்கும் 

செம்மண் பரப்பில் வண்டினங்கள் 

பூக்கள் நடுவே தலையை நீட்டி 

வெட்டுக்கிளிகளைப் பிடித்தாலும் 

கற்களைப் புரட்டி பூச்சிகளைத் தேடி 

சமநிலை செய்து வாழ்ந்தாலும் 

உருமறை பெற்ற கல் குருவி 

அசையாதிருக்கும் நேரத்தில் 

அதன் இருப்பை உணர முடியாது.


இந்தத் தொகுப்பில் உச்ச அழகான கவிதையாக,கீழ்க்காணும் இந்தக் கவிதையைக் காண்கிறேன்.


நெருப்பின் வண்ணம் கொண்டு 

பறவையை வரைகிறேன் 

செம்மஞ்சள் நெருப்பள்ளி உடலும் 

அடர்ந்த சிவப்பால் சிறகுகளும் 

கரிய புகை கொண்டு வாலும் 

வரைந்தாயிற்று 

கொஞ்சம் பனிமலையைத்

தூவியபின் 

கண்டாங்கோழியைப் போலிருக்கிறது.


ஒரு வனப் பயணத்தில், நீங்கள் அலட்சியமாக சுண்டி எரிகிற புகைத்து முடித்த அணைக்கப்படாத சிகரெட் துண்டில் இருக்கும் நெருப்பு எத்தனையோ ஏக்கர் பரப்பிலான அரியவகை மரங்களையும் பல்லுயிர்களையும் அழிக்கிறது. அந்தக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறது இந்த கவிதை.


புகையும் சிகரெட் தூண்டிலிருந்து 

பற்றி எரியும் மலைக்காட்டில் 

புற்கள், சிறு செடிகள் 

பெரும் மரங்கள் 

என யாவும் கருகிய பின் 

நெருப்பின் நிறம் கொண்ட பறவை 

தேடி அலைவது 

தன் கூட்டை மட்டும் அல்ல.


பறவைகள் விதைகளை பரவச் செய்வதன் மூலமாக காடுகளை உருவாக்குகின்றன என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, செங்குதச் சின்னானால் பரவுகிற உண்ணிச் செடிகளால் நமது மண்ணின் மரங்கள் அழிவது எத்தனை வேதனை.


நெடு மரத்தின் உச்சியிலோ, 

சிறு புதரின் மறைவினிலோ 

பாடித் திரியும் சின்னான்கள் 

பரவச் செய்த உண்ணிச் செடிகளால் 

அரிதாகிப் போகிறது 

இயல் தாவரங்கள்.


அழகிய வண்ணங்களைக் கொண்ட செம்பருந்துகளை இப்பொழுதெல்லாம் அரிதாகவே காண முடிகிறது. அதற்கான காரணத்தைப் பேசுகிறது இந்த கவிதை.


நன்னீர் பெருகிய ஆறுகள் இருந்தன 

அதன் கிளைகள் பலவால் ஏரிகள் நிரம்பின 

உயிர்க்கொல்லி மருந்துகள் 

இல்லா நிலத்தில் 

பல்லுயிர்கள் யாவும் 

செழித்தே விளங்கின 

கழனிகள் யாவும் மருந்தால் நிரம்ப 

நீந்திய மீன்கள் செத்து மிதந்தன 

நிலமும் நீரும் நஞ்சான பின்னே 

செம்பருந்தினமும் குறைந்தே போயின.


மணல் கொள்ளையால் வெறுமனே ஆறுகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் ஆற்று ஆலாவும் பாதிக்கப்படுகிறது என்பதை பொட்டில் அடித்தால் போல் சொல்லுகிறது இந்த கவிதை.


மணலோடு மணலாய் 

ஆலா முட்டைகளையும் 

அள்ளிச் செல்லும் லாரியின் பின்னல் 

ஆலா பறக்கிறது 

ஆலா திரும்பி வரும் என 

காத்திருக்கிறது ஆறு 

முட்டைகள் திரும்ப கிடைக்கும் என 

தேடுகிறது ஆலா 

மேலும் மணல் அள்ளத் 

திரும்பி வருகின்றன லாரிகள்.


வேட்டையாடும் பறவைகள் போல் கூர்நகங்களும் இல்லை. நீர்காக கால்களைப் போல் இடைச்சவ்வும் இல்லை. ஆனாலும் ஆகாயத் தாமரையில் தகவமைத்துக் கொள்ளுகிறது நாமக்கோழி.


உப்பு கொத்திகளை வேட்டையாடும் சிற்றெழால்


நம் மண்ணின் மரங்களையே தேர்வு செய்கிறது சோலைப் புறா.


மறைந்து போன வரகுக் கோழிகளின் அழகிய நடனம் 


பறவைகளிலும் விலங்குகளிலும் ஆண்களே அழகு. மயில் உள்ளான் பறவை ஒரு விதிவிலக்கு அதில் பெண்ணே அழகு.


காட்சிப் பிழையால் நாம் கடந்து போகிற காட்டுப்பக்கிகள்,


இமயத்தில் இனப் பெருக்கம் செய்து,தென்னகத்தில் வலம் வரும் வாலாட்டிகள்,


இந்தியாவில் இன்னும் 100 கான மயில்களே மீதமிருக்கின்றன.


இப்படி,நம்மைச் சுற்றி வாழும்,நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத பறவையினங்கள் குறித்த ஆச்சர்யமான தகவல்களையும், நமது சுயநலத்தால் சீரழிந்த சுற்றுச் சூழலை,அதன் கொடுமையான விளைவுகளையும் அழகிய வடிவமைப்பில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிற புத்தகம்.


ஜி.சிவக்குமார்.

Post a Comment

0 Comments