கொடைக்கானல் E Pass பற்றிய என்னுடைய கருத்து, இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. வாசித்துப் பாருங்கள்.
நன்றி - ஆனந்த விகடன்.
பழனிமலைத் தொடரில் உள்ள கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.6 கோடி இருக்கிறது. இத்தனை மக்களை உண்மையில் ஒரு மலைப்பகுதி தாங்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் விடுதிகளின் எண்ணிக்கையும், உணவகங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறன. மேலும் பல புதிய சுற்றுலாத் தளங்கள், சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு உருவாக்கப்படும் சுற்றுலாத்தளங்களால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் கொடைக்கானல் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படும் வாகனங்களால் மேலும் பாதிப்படைகிறது.
தொலைதூரத்தில் இருந்து வருபர்கள் கூட, வாகன நெரிசலால் நாள் முழுக்க சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க புதிய சாலைகளை அமைப்பதும், சாலைகளை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. வாகனங்களில் அடிபட்டு காட்டுயிர்கள் பலியாவதும் தொடர்ந்து நடக்கிறது. மேலும் வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலி மாசு, பண்டிகை காலங்களில் ஒலிப்பெருக்கிகளில் எழுப்பப்படும் அதிகப்படியான ஒலி, இயற்கையின் அமைதியை குலைத்து இங்குள்ள காட்டுயிர்களின் சூழலுக்கு இடையூறாக அமைகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களாலும் தூக்கி எறியப்படும் நெகிழிக் குப்பைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
0 Comments