நண்பர் திரு.எ.யோசுவா தொகுத்திருக்கும் செண்பக மரம் நூலில், என்னுடைய கட்டுரையையும் இடம்பெறச் செய்தமைக்கு, சோலைக்குருவி அமைப்புக்கு மிக்க நன்றி. பழனிமலைத் தொடரை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த நூல், சூழலியல் ஆர்வம் கொண்ட பலருடைய கட்டுரைகளையும், கவிதைகளையும்உள்ளடக்கியதாக உள்ளது.
திரு.தினேஷ் (ம) நவீன் பயஸ் ஆகியோரது ஒவியங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இந்த நூலை கொண்டுவர எடுத்துக் கொண்ட மெனக்கெடல் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. பழனிமலைத் தொடரில் உள்ள தாவரங்களை ஆணவப்படுத்திய திரு.கே.எம்.மேத்யூ அவர்களுக்கு இந்த நூல் சமர்பிக்கப்பட்டது மிகவும் பொருத்தம்.
சோலைக்காடுகளின் தற்போதைய அவலமான நிலையை விளக்குகிறது திரு.எ.யோசுவா அவர்கள் எழுதிய, "பெயர் தெரியாத சோலை" என்கிற கட்டுரை. "இயற்கை சூழலில் துயிலும் தந்தை" என்கிற கட்டுரை, திரு.கே.எம்.மேத்யூ அவர்களின் வாழ்கை வரலாற்றை விளக்கும் அருமையானதொரு படைப்பு.
பறவையியல் அறிஞர் திரு.சலீம் அலி அவர்களின் மாணவரான Ms.Pippa Mukherje எழுதியிருக்கும் "The Flora" என்ற கட்டுரை, திரு.கே.எம்.மேத்யூ அவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளச் செய்கிறது. "நம் நாவல்" என்ற கட்டுரையை எழுதியிருக்கும் முனைவர்.க.திவ்ய பாரதி மற்றும் பேராசிரியர் ம.ஆனந்த் ஆகிய இருவரும் நாவல் மரத்தின் சிறப்புகளை சங்க இலக்கியத்தில் தொடங்கி அறிவியல் ஆதாரங்கள் வரை தொகுத்திருக்கிறார்கள். Canopy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கவிகை எனப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ஏ.முருகேஸ்வரி அவர்கள் எழுதியிருக்கும் "உண்ணிச்செடிக்கும் பழங்குடி மக்களுக்கும் உள்ள ஒரு உறவு" என்னும் கட்டுரை மலைவாழ் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது.
திரு.அ.மைக்கேல் புரோ அவர்கள் எழுதிய "இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?" கட்டுரை ஒரு மரத்தை வனமாகக் கருதுகிறது. திரு.ஜெய பிரிங்ளி இளஞ்சேரலாதன் அவர்கள் தொகுத்திருக்கும் சூழலியல் கருத்துக்களில் அவரது உழைப்பு தெரிகிறது. திரு.எ.யோசுவா அவர்கள் எழுதிய "நான் மான் பேசுகிறேன்" என்ற கட்டுரை மானின் மொழியில் சூழலியல் பேசுகிறது. முனைவர்.திரு.ராஜமாணிக்கம் அவர்கள் எழுதிய "சோலைக்காடா? குப்பை மேடா?" என்ற கட்டுரை பழனிமலைத் தொடரின் இயற்கை அமைப்பையும், இன்று சந்திக்கும் சூழலியல் பிரச்சனைகளையும் விரிவாகப் பேசுகிறது.
திரு.தினேஷ் அவர்கள் எழுதியிருக்கும் "செம்பருத்தி மரம்" என்ற கவிதை மரத்தின் வலியை மனிதில் தைக்கிறது. திரு.Mark Antrobus எழுதிய Paraquat, Glyphosate and me என்கிற கட்டுரை நமக்கான எச்சரிக்கை.
சோலைக்குருவி அமைப்பு செய்துவரும் அரும்பணிகள் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அவர்கள் தொடங்கியிருக்கும் பதிப்பகத்தின் வழியே முதல் நூலே மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நிறைய தகவல்களோடு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட கணம் மறக்கவியலாதது. நண்பர்களுக்கு நன்றி. தொடர்ந்து நூல்கள் வெளிவர வாழ்த்துகிறேன்.
0 Comments