ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை பிறழ்வு தொடர்பான மாநாட்டின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். திரு.கோவை சதாசிவம் அவர்கள் இந்த சிறிய நூலின் வழியே பெரிய உண்மைகளை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதியிருக்கிறார். "டைனோசர்கள்" பேசுவது போல மனிதர்கள் உணர்ந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், சம காலத்தின் சூழலியல் எதார்த்தங்களை அருமையாக விளக்குகிறது.
தொழிற்புரட்சி காலத்திற்கு பிறகு காற்றில் கரியமில துகள்கள் எவ்வாறு பெருகின, புவியின் வெப்பநிலை எவ்வாறு உயர்ந்து வருகிறது, பல்லுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, கடல் மட்டம் உயர்வதால் பாதிக்கப்படப்போகும் தீவுகள் என்ன, பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகி வருகிறது என உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
தனித்துவமான உயிரினங்கள் வாழும் மடகாஸ்கரில் போபாப் மரங்கள் தண்ணீர் தொட்டிகளாக இருந்த நிலை மாறி தற்போது காய்ந்து வருவதையும், பனிப்பாறைகள் உருகி வருவதால் அண்டார்டிக்காவில் இனப்பெருக்கம் செய்ய முடியாது போன பென்குயின்களின் நிலை பற்றியும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
நெகிழியினால் ஏற்படும் பாதிப்புகளையும், சூழல் மாசுபாடுகளையும் விவரிக்கும் ஆசிரியர் இந்த மாநாட்டில் பேச மறந்தவற்றை நமக்கு தன் எழுத்துகளின் வழியே அரியச் செய்கிறார். சூழலின் நலன் காக்க தொடர்ந்து எழுதி வரும் திரு.கோவை சதாசிவம் அவர்கள், படைத்திருக்கும் இந்த நூல், கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2 Comments
அருமை அண்ணா.. காலத்திற்கு தேவையான கண்ணோட்டம்..
ReplyDeleteநன்றி
Delete