காட்டின் குரல் : திரு.சு.பாரதிதாசன்

அருளகம் அமைப்பை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்  திரு.சு.பாரதிதாசன் அவர்கள் எழுதிய நூல் "காட்டின் குரல்". காட்டை நேசிக்கும் ஒரு மனிதரால் மட்டுமே இப்படி ஒரு நூலை எழுதிட முடியும். பல்வேறு காட்டுயிர்களின் குரல்களும், இவரின் எழுத்துகள் வழியாக ஒலிக்கிறது. தன்னுடைய அனுபங்களோடு சேர்த்து காட்டுயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார். 


தேவாங்குகளை நேரில் பார்த்த அனுபவங்கள் முதல் அவற்றின் உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றோடு, மூட நம்பிக்கைகளால் அந்த இனமே அழியும் நிலைக்கு எப்படி தள்ளப்பட்டுள்ளது என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார். வெள்வேலம், குடைவேலம் போன்ற மரங்களில் இவற்றை பார்க்க முடியும் என்று அறிந்தபோது பழனி அருகே இதை தேடாமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது. அதிக அளவில் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால், பூச்சிகளின் கட்டுப்பாட்டில் தேவாங்குகளின் பங்கு அளப்பரியது. தேவாங்குகள் பற்றி நிலவும் மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டும் என எடுத்துரைக்கிறார் ஆசிரியர். 

பறவைகளுக்கு வளையமிடும் அனுபவம் பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. வாய்ப்புகள் கிடைக்கும் போது தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதில் இருந்தே ஆசிரியருக்கு பறவைகள் மீது இருக்கும் ஆர்வம் நன்றாகக் புரிகிறது. மேலும், வளையமிடும் முறை, அதற்கான காரணங்கள் என அறிவியல் பூர்வமாக நீளும் கட்டுரையில் பல பறவையினங்களின் தமிழ் பெயர்களை பயன்படுத்தி இருப்பதை பாராட்ட வேண்டும். 

பங்குனி ஆமைகளை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அறிந்த செய்தியாக இருந்தாலும், அதில் பங்கேற்ற ஆசிரியரின் அனுபங்கள் எதார்த்த சூழலை விளக்குவதாக இருந்தது. அலுங்கு அழிந்துவரும் உயிரினம் என்பதையும், அதன் அழிவிற்கு மூட நம்பிக்கைகள் முக்கிய கரணம் என்பதையும் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

வேங்கைப்புலிகளையும் இருவாச்சிப்பறவைகளையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அதன் வாழிட சூழல் மற்றும் அவை சந்திக்கும் சவால்களையும் விளக்கி இருக்கிறார்.

மிகவும் குறிப்பாக பாறு கழுகுகள் அழிந்து போன காரணத்தையும், அதை காக்க வேண்டிய அவசியத்தையும் திரு.பாரதிதாசன் அவர்களை விடவும் யாரும் சிறப்பாக எழுதிவிட முடியாது. அதற்கு அவருடைய கள அனுபவங்களே காரணம். இன்றும் பாறு கழுகுகளை காப்பற்ற மிகப் பெரிய முயற்சிகளை செய்து வருகிறார். 90% அதிகமான பாறு கழுகுகள் அழிந்துவிட்ட நிலையில் அருளகம் அமைப்பு செய்துவரும் பணிகள் அளப்பரியது. பாறு கழுகுகளை எதிர்காலத் தலைமுறைக்கு, ஆசிரியரின் எழுத்தும் பணியும் கொண்டு சேர்க்கும் என நம்புவோம்.

Post a Comment

4 Comments