அதிகரிக்கும் தெருநாய்களால் ஆபத்தா ?

இந்தியாவின் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் அதிகரித்துவிட்ட தெருநாய்கள் தற்போது காட்டுயிர்களுக்கும் இடையூறாக மாறிவிட்டன. தெரு நாய்கள் சுற்றுச்சூழல் மோசமடைந்து வருவதன் அடையாளமாகப் பார்க்கலாம். தெரு நாய்களை குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தெரு நாய்கள் பெருகுவதற்கு காரணமாக இருக்கும் மனிதர்களின் தவறுகளை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன். திடக் கழிவு மேலாண்மையில் அக்கறையில்லாததன் விளைவால் தெரு நாய்கள் அதிகம் பெருகிவிட்டன. 

Photo by Mr.BalaMurali
Photograph by Sadham

நாய்களுக்கென்று உரிமையாளர்கள் இருக்க வேண்டும். நாய்கள் அவர்களது கண்காணிப்பில் வளர்க்கப்பட வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பவர்களில் பலரும் நாய்களை வளர்க்க முடியாமல், தெரு நாய்களுக்கு உணவளித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரக்கூடும். ஆனால் அளவுக்கு அதிகமாக பெருகும் தெரு நாய்கள், காட்டுயிர்களையும் துரத்திக் கொல்கின்றன. இது சூழல் சமநிலையை குலைப்பதுடன், சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது.

Photograph by Ramadevi

மேலும் மனிதர்களுக்கும், பல நேரங்களில் தெரு நாய்கள் அச்சுறுத்தலாக மாறி வருவதை யாரும் மறுக்க முடியாது. நாடெங்கும் தெரு நாய்களால் பாதிக்கப்படுபவர்களை பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்வது அச்சமூட்டும் உணர்வாக மாறியிருக்கிறது. சாலை விபத்துகளுக்கும், சில நேரங்களில் காரணமாக அமைகின்றன. இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

Photograph by Raj

சென்னையில் மிகவும் அரிதான வெளிமான்கள், கிண்டி தேசிய பூங்காவில் வாழ்கின்றன. ஆனால் தெரு நாய்களால் அவை கொல்லப்படுகின்றன.

இந்தியாவில் மட்டுமே காணப்படும் கானமயில்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் அவை தெரு நாய்களால் கொல்லப்படுகின்றன. 

கொடைக்கானலில் மலை அணில் ஒன்று, தெரு நாயால் தூக்கிச் செல்லப்படுவதை நண்பர் பகிர்ந்திருந்தார். 

Photograph by Mr.Pringly

சென்னையில் பறவை நோக்கலில் ஈடுபட்ட போது பள்ளிக்கரணை (சோழிங்கநல்லூர்) சதுப்பு நிலத்தில் பூ நாரைகளை தெரு நாய்கள் துரத்திச் செல்வதை பார்த்தேன்.

தரையில் முட்டையிடும்பறவை இனங்கள் தெரு நாய்களால் வாழிடத்தை இழக்கின்றன.

ஹரியானாவில் உள்ள சுல்தான்பூர் தேசிய பூங்காவில் நீலமான் (Nilgai) தெரு நாய்களால் கொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் சம்பல் ஆற்றில் நீர் நாய்கள் தெரு நாய்களால் துரத்தப்படுகின்றன.

கேரளா முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், தெரு நாய்களால் வேட்டையாடப்பட்டது.

மஹாராஷ்டிராவில் மிகவும் அருகிவிட்ட ஓநாய்கள் தெரு நாய்களால் துரத்தப்பட்டு அதன் வாழிடத்தை மேலும் இழக்கின்றன.

தெருநாய்களால் கவரப்படும் சிறுத்தைகள் மனிதக் குடியிருப்புகளுக்குள் ஊடுருவும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இது மனித விலங்கு மோதல் பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது. 

ஒரு முறை தெரு நாய்களால், கடமான் குட்டி ஒன்று துரத்தப்பட்டதை பழனி மலைத் தொடரின் அடிவாரத்தில் (தேக்கந்தோட்டத்தில்) பார்த்தேன்.

Photograph by Dr.Sivakumar

இவை யாவும் உதாரணங்கள் மட்டுமே. இது போல நாடெங்கும் தெரு நாய்களால் பல காட்டுயிர்களும் பாதிக்கப்படுகின்றன. தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்பதோ, அவை கருத்தடை செய்யப்பட வேண்டும் என்பதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. அது சரியான வழிமுறையும் அல்ல. மாறாக, அவை பெருக குப்பை மேடுகள் காரணமாக இருக்கின்றன என்பதையும், அவை சூழல் மோசமடைந்து வருவதன் அடையாளமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். தெரு நாய்கள் இல்லாத இந்தியா தூய்மையான இந்தியாவாக இருக்கும் என்று சொல்லவில்லை. தூய்மையான இந்தியாவில் தெரு நாய்கள் இருக்காது என்கிறேன். மேலும், பொதுவாகவே நாய்கள் அதன் உரிமையாளார்களால் பராமரிக்கப்பட வேண்டும். 

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நாய்கள், எப்போதும் நம்மை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் என்பதிலும் , நம் கவலைகளையும் போக்கும் அற்புத உயிரினம் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் காட்டுயிர் பேணலில் தெரு நாய்கள் சவாலாக மாறி இருக்கின்றன.


காட்டுயிர்களுக்கு ஏன் உணவு தரக்கூடாது ?


Post a Comment

21 Comments

  1. Ungal katturaiyin nokkam migavum thelivanathu.. Nalla pathivu 🙌🏾👏🏽👏🏽👏🏽

    ReplyDelete
  2. Ungal katturaiyin nokkam migavum thelivanathu.. Nalla pathivu 🙌🏾👏🏽👏🏽👏🏽

    ReplyDelete
  3. உண்மை.மதுரையிலும் பழனியிலும் பெருகியுள்ள தெரு நாய்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன

    ReplyDelete
  4. தெளிவான உண்மையை விவரித்துள்ளீர்கள்..

    ReplyDelete
  5. வனப்பகுதிகளுக்கு அருகே வசிக்கும் அனைவரும் காவலுக்காக நாய்கள் வளர்க்கின்றனர் ‌ஆனால் அந்த நாய்களே அவர்களுக்கு வினையாக மாறுகிறது. யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிக்க காரணமாகிறது.
    பழனி அருகே சமீபத்தில் யானை தாக்கியதில் மரணமடைந்த விவசாயி அவரது நாய் குரைத்ததால் தான் வெளியே வந்தார். அதே போல் எங்கள் தோட்டத்திற்கு வரும் பெரியவரும் அவரது நாய்களை துரத்தி வந்த காட்டுப்பன்றியிடமிருந்து நூலிழையில் தப்பினார். பெரிய விலங்குகளை குரைத்து வெறுப்பேற்றி விட்டு சமாளிக்க முடியாத நிலை வரும் போது வளர்த்துபவரிடம் ஓடி வருகிறது. அந்த விலங்குகளும் அதனை துரத்தி வரும் போது மோதல்கள் ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  6. நீங்கள் இறுதியில் சொல்லியுள்ள நாய்களால் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது உண்மை ஆனால் வரையறைகள் பேணும்போது இன்னும் நல்லது நன்றி

    ReplyDelete
  7. Unbiased opinion Satheesh

    ReplyDelete
  8. Exactly correct 💯💯

    ReplyDelete
  9. கொடைக்கானல் வனபகுதியில் காட்டுகோழிகளை வேட்டையாடி உண்ணும் நாய்கள் வனப்பகுதியிலேயே தங்கிவிடுகிறது . அருமையான விளக்கம் சார்.

    ReplyDelete
  10. Arumaiyana pathivu Anna!!vazhthukkal!!

    ReplyDelete
  11. கட்டுரை செறிவாக அமைந்துள்ளது.ஆனால் வளர்த்தப்படுவதை என்பதற்கு மாற்றாக வளர்க்கப்படுவதை என்று எழுதினால் அந்த வரி இன்னும் சிறப்பாகவும் சரியாகவும் இருக்கும். வாழ்த்துகள் தம்பி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. மாற்றிவிட்டேன்

      Delete
    2. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக என் கவனத்தை ஈர்த்த விஷயம். இதற்கு இப்படி ஒரு காரணத்தை யோசிக்க வில்லை. இப் பார்வைக்கு நன்றி

      Delete