ரஷ்யாவிலிருந்து சிங்கப்பூருக்கு..!!

சிங்கப்பூரில் ஓடும் சிராங்கூன் நதியின் கரையில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சிறிய பறவையை கண்டேன். மரத்தின் கிளைகளுக்கு நடுவில் இருந்து அவை ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தன. உயரமான மரங்களில் அமரும் பறவைகளையோ அல்லது அடர்ந்த கிளைகளுக்கு இடையே இருக்கும் பறவைகளையோ பார்ப்பது சற்று கடினமானது. நான் அவதானித்துக் கொண்டிருந்த போதே நான் வழக்கமாக பார்க்கும், மலேசிய விசிறிவால் குருவிகள் (Malaysian Pied Fantail) இரண்டு அதே மரத்தில் இருந்து பறந்து சென்றன. இருப்பினும் அந்த சிறிய பறவையை எப்படியும் காண வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது. நம் கை சுண்டுவிரல் அளவே உள்ள அந்த பறவை சிறிது நேரத்தில் வெளியே வந்து வேறொரு மரத்தில் சென்றமர்ந்தது. "ஆர்டிக் கதிர்குருவி" (Arctic Warbler) எனப்படும் இந்த சிறிய பறவை ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வலசை  வருகிறது. பறவைகளின் வலசை குணங்கள் இன்னமும் அவிழக்கப்படமுடியாத பெரும் முடிச்சாகவே இருக்கிறது. 

Arctic Warbler

பறவைகள் வலசைக்கு மிக முக்கிய காரணம், வட துருவத்தில் குளிர் காலங்களில் அவற்றுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அவை தென் துருவம் நோக்கி வருகின்றன. மீண்டும் வசந்த காலத்தில் அவை தன்னுடைய நிலத்திற்கே சென்று கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நடைமுறையை பல  ஆயிரம் ஆண்டுகளாக அவை தொடர்ந்து செய்கின்றன. ஓரிடத்திற்கு வலசை வரும் பறவை, அடுத்த வருடம் மீண்டும் அதே இடத்திற்கு வருவது மிகப்பெரிய ஆச்சர்யம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை தன் இயல்பூக்கத்தில் வருவதாகவே பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றின் மரபணுவில் பொதிந்த இந்த இயல்பூக்கம் அவற்றை சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி செலுத்தலாம். 

Malaysian Pied Fantail

வலசைக்காக அவை தன்னை முன்பே தயார்படுத்திக் கொள்வதும் நடக்கிறது. சமீபத்தில் "Bar-tailed Godwit" என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியன் தீவுக்கு எங்கேயும் நிற்காமல் 11 நாட்கள் தொடர்ந்து பயணித்து வந்து சேர்ந்திருக்கிறது. தொடர்ந்து 11 நாட்கள் பயணிக்க அவை எப்படி தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இப்படி வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் ஈர நிலங்களை நம்பியே வருகின்றன. நம்முடைய தேவைக்காக இந்த நிலங்கள் மாற்றப்படும் போது அவை உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். நாடுகள், எல்லைகள், அவற்றுக்கு இடையே நடக்கும் சண்டைகள் அனைத்துமே மனிதர்களுக்கு மட்டுமே. இவை எதுவம் அறியாத பறவைகள் தங்களுக்கான வாழிடத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. ரஷ்யாவின் எல்லையில் வானம் புகை படிந்து காணப்படுகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆர்டிக் கதிர்குருவி மார்ச் மாதத்தில் திரும்பிச் செல்லும். அங்கே சென்று அவை உணவு தேடவும், கூடமைக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற சூழல் நிலவ வேண்டும். அதை ஆறறிவு(?) கொண்ட மனிதர்கள் செய்யவேண்டும் என்பதே நகைமுரண். 

Post a Comment

9 Comments