இந்தியாவின் எல்லா திசைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து தான் பெற்ற அனுபவங்களை கட்டுரைகளாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ்.ரா. இந்தியாவின் நிஜ முகம் எது என்ற கேள்வியை இந்த நூல் எழுப்புகிறது. இந்தியாவின் பிரம்மாண்டங்களை விடவும் எளிய மனிதர்களையே இந்தியாவின் அடையாளமாக இந்த நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த பெரும் நிலப்பரப்பில் எத்தனை விதமான மனிதர்கள். தாஜ்மஹாலையும் ஜெய்பூர் அரண்மணைகளையும் விட எளிய மனிதர்களின் மூலமாக இந்தியாவை அடையாளப்படுத்துகிறார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனியே ஒரு கதை. ராஜஸ்தானின் பாலைவனத்தில் இருக்கும் பார்வையற்ற ஒட்டக வியாபாரி வாழும் இதே தேசத்தில் ஊரை விட்டு சென்னைக்கு வந்து கூழ் விற்கும் விவசாயியும் வாழ்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் வேறு வேறு பகுதிகளை சேர்ந்த எளிய மனிதர்கள். இவர்கள் யாருமே இந்த நூலை வாசித்திருக்க மாட்டார்கள். எஸ்.ரா அவர்களின் வாசகனான நீலகண்டன் அவர்கள் உள்பட. பெங்களூரில் வசித்த நீலகண்டன் அவர்களை பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. எஸ்.ரா அவர்களின் எழுத்தின் வழியே அவர் குரலை கேட்க முடிந்தது.
கட்டுரைகளோடு சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்துகிறார். சென்னையில் தங்க இடமின்றி கோடம்பாக்கத்தில் ஒரு பாலத்தின் அடியில் படுத்திருந்த அனுபவங்களை வாசிக்கும் போது எஸ்.ரா அவர்களின் விடா முயற்சியும் அவருக்கு தன் எழுத்தின் மீதிருக்கும் நம்பிக்கையும் சிலிர்ப்பூட்டக் கூடியதாக இருக்கிறது.
எஸ்.ரா அவர்களின் கட்டுரைகளின் சிறப்பே அவை அறம் சார்ந்து இருப்பது தான். அந்த அறத்தின் பாதையில் நம்மை அழைத்துச் செல்வதும் எளிய மனிதர்களின் வாழ்வின் மூலமாக அந்த அறத்தை உணர்த்துவதும் ஒரு உன்னதமான கலை. அதை எப்போதும் போல இந்த நூலிலும் செய்திருக்கிறார். வெயிலும் இல்லாத மழையும் இல்லாத ஒரு நாளில் ஜன்னலோர ரயில் பயணம் என்ன உணர்வுகளைத் தருமோ, இந்த நூலில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் போதும் அதை உணரலாம்.
0 Comments