"தூவி" நூலின் முதல் விமர்சனம். மிக்க நன்றி சிவக்குமார் அவர்களே.
பறவையியல் சூழுலியல் கவிதைகள்
பா.சதீஷ் முத்து கோபால்
காக்கை கூடு பதிப்பகம்
பறவைகளைப் பார்ப்பதும்,பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதும் மனித வாழ்வுக்கும்,சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் மிக்க அவசியமானதொன்று. பொன் முதுகு மரங்கொத்தி,குள்ளத்தாரா, புள்ளி ஆந்தை, குளத்து நாரை எனத் தொடங்கி அறுபத்தி இரண்டு பறவைகள் குறித்த பறவைகளின் அழகிய புகைப்படங்களுடன் பறவைகள் பற்றிய பறவைகளின் வாழ்வியல் பற்றிய விவரங்களை குறுங்கவிதைகள் வடிவத்தில்,அழகான பழனி மலைப் பூங்குருவியின் அட்டைப்படத்துடன்,நேர்த்தியான வடிவமைப்பில் அழகாகச் சொல்லியுள்ள ஆச்சரியமான புத்தகம்.
பறவைகள் குறித்த ஒரு செய்தியை அப்படியே தராமல் கவிதையாக்கித் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
ஆண் தூக்கணாங்குருவி கூட்டை பாதி அளவில் தயார் செய்துவிட்டு பெண் குருவிக்காகக் காத்திருக்கும்.பெண் குருவி வந்து கூட்டை ஆய்வு செய்து அதற்குப் பிடித்தால் மட்டுமே கூட்டை நிறைவு செய்து,இணையுடன் வாழும் என்கிற தகவலை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்
கூட்டை ஆய்வு செய்து விட்டு
வெளியே வந்த பெண் குருவியின்
பதிலுக்காக
தொங்கியபடியே காத்திருக்கிறது
ஆண் குருவி.
நெற்பயிரின் நீண்ட பசுந்தாளை
கொணர்ந்து வந்த பெண் குருவி
காதலை சிந்திச் செல்கிறது.
கூலி ஏதும் பெற்றுக்கொள்ளாமல் பல நூறு எலிகளை வேட்டையாடி அதன் மூலமாக கூகை மனிதனுக்கு உதவுவதையும்,நீலச்சிட்டு உதிர்க்கும் அத்திப் பழங்களை உண்ணக் காத்திருக்கும் காட்டுப் பன்றி என பறவை விலங்குகளின் சார்பு வாழ்வையும் சொல்வது அழகு.
காடுகளில் மனிதர்கள் போடும் குப்பைகளால் அடர் வனங்களிலும் இருக்கும் காக்கை,பொங்கி வரும் மெல்லிசையால் காட்டை உயிர்ப்பிக்கும் சோலை பாடி,இணைக்கும்,குஞ்சுகளுக்கும் தன் தொண்டைக்குழியில் அத்திப் பழங்களை சேகரித்துத் திரும்பும் இருவாட்சி என எத்தனை எத்தனை பறவைகள் வைத்தாய் இயற்கையே.
எவ்வளவு கிடைத்தாலும் எவ்வளவு சேர்த்தாலும் போதும் என்ற மனம் இல்லாமல் பரபரக்கும் மனிதனின் பேராசையும் கேலி செய்யும் இந்தக் கவிதையைப்பாருங்கள்
இரண்டு இலைகளை
இடைவெளியின்றி இணைத்து
நேர்த்தியாகத் தைத்து
கூடமைத்து
போதுமென்று உணர்ந்தபின்
மூன்றாவது இலையை
அப்படியே விட்டு வைக்கிறது
தையல் குருவி.
பனைமரங்கள் வெட்டப்பட்டதால் இருப்பிடமிழந்த பனங்காடைகள், பேரவலமாக குப்பைகளில் இரை தேடும் நாகணவாய்கள்,காட்டுப் பூனைகளும்,குள்ள நரிகளும் காணாமல் போனதால் நீக்கமற நிறைந்து விட்ட நீல மயில்கள்,ஓடைகள்,சாயப்பட்டறைக் கழிவுகளால் நுரைத்து,மீன்களற்றுப் போனதால் தவிக்கும் சிரல்(மீன்கொத்தி) இப்படி நிறையத் தகவல்களால்,சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டையும்,அதனால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் சொல்கிறது புத்தகம்.
இரு கால்களாலும் இறுகப் பற்றிய மரத்தை
கருத்த வாலால் அழுத்தி
தலையைச் சற்றே பின் தள்ளி
நொடிக்கிருமுறை
கூரிய அலகல் விசையோடு மோதி
பட்டைகளைப் பிளந்து
நீண்ட நாவால்
கணுக்காலிகளை பிடித்துண்ணும்
பொன்முதுகு மரம்கொத்தி
ஒளிபுகா அடர்வனத்தின்
சுடர்.
ஒளிபுகா அடர்வனத்தின் சுடர்.என்னவொரு அழகிய கவிதை வரி. இந்தத் தொகுப்பின் உச்சம் என இந்தக் கவிதையைக் கூறுவேன்.
புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் பறவைகளைக் கவனியுங்கள்.இந்தப் புத்தகத்தின் சிறப்புகளை அப்போது முழுமையாக உணர்வீர்கள்.
0 Comments