கழுதைப்புலி : திரு.கோவை சதாசிவம்

தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சியை காலத்தின் தேவை கருதி திரு.கோவை சதாசிவம் அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கழுதைப்புலிகள் இருப்பதே பலரும் அறியாதது. அதற்கு காரணம் மற்ற விலங்குகளைப் போல கழுதைப்புலிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாமல் விட்டததுதான். காட்டை சமநிலையில் வைப்பதில் கழுதைப்புலிகள் மிகவும் முக்கியமானவை. 


குழந்தைகளிடம் கூட உங்களுக்கு விருப்பமான விலங்கு எது என்று கேட்டால் யானை, புலி, சிங்கம் என்பதை தாண்டி சொல்லமாட்டார்கள். பெரியவர்களே கூட அப்படித்தான். கழுதைப்புலிகள் பற்றிய மூட நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் அவற்றின் புகழ் பரவாமல் தடுத்துவிட்டன. இரைக்  கொல்லிகள் விட்டுச் சென்ற மீதியை உண்டு வாழும் கழுதைப்புலிகள் காட்டை தூய்மைப்படுத்துகின்றன. காட்டில் மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நோய் பரவாமல் பாதுகாக்கின்றன. 

இந்த நூல் இந்தியாவில் காணப்படும் வரிக்கழுதைப்புலிகளை மட்டுமல்லாது மற்ற மூன்று கழுதைப்புலிகளை பற்றியும் பேசுகிறது. அவற்றின் வாழ்வு முறை, இனப்பெருக்கம், உணவு, வாழிடம் என விரிவாக பேசும் இந்நூல் கழுதைப்புலிகள் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

வெறும் கட்டுரையாக இல்லாமல் உரையாடல் மூலம் இந்நூலை கொண்டுவந்திருப்பது நல்ல முயற்சி. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழி நடையில் இருப்பதால் இந்நூல் பலரையும் சென்றடைய வேண்டும் என்றே விரும்புகிறேன். 

நூலின் ஆசிரியரே சந்தேகிப்பது போல் கழுதைப்புலிகளுக்கு வேறு தமிழ் பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த உயிரினம் கூடுதல் கவனம் பெறலாம். மருத்துவர் கே.அசோகன் எழுதியிருக்கும் அனுபவங்களின் மூலமான அறிமுக உரை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. கவனிக்கப்பட வேண்டியது. 

இந்நூலை காக்கைக்கூடு இணையதளத்தில் பெறலாம்.

https://crownest.in/product/kazhuthai-puli-kovaisathasivam/

Post a Comment

0 Comments