தமிழகத்தின் இரவாடிகள் : திரு.ஏ.சண்முகானந்தம்

நண்பர் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் திரு.சண்முகானந்தம் எழுதிய "தமிழகத்தின் இரவாடிகள்" என்ற நூல் ஒரு புதிய முயற்சி. சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துவரும் வேளையில், இரவில் செயலாற்றும் காட்டுயிர்களை பற்றிய, அதுவும் குறிப்பாக தமிழகத்தில் காணப்படும் காட்டுயிர் பற்றிய நூல் இது.

இரவில் செயலாற்றும் காட்டுயிர்கள் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறது இந்த நூல். இரவில் காணப்படும் காட்டுயிர்கள் யாவை? அவற்றின் பண்புகள் என்ன? அவற்றின் தோற்றம் எப்படி இருக்கும் ?அவற்றின் வாழிடம் எது? இன்றைய சூழலில் அவை சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என பல கேள்விகளுக்கான பதிலை இந்த நூலில் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். 

பறவைகள், பாலூட்டிகள் மட்டுமல்லாமல் இரவில் காணப்படும் சில பூச்சி இனங்களையும் இந்த நூலில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். முள்ளம்பன்றி, அலங்கு, மூங்கணத்தான், தேவாங்கு, மரநாய், புனுகுப் பூனை, காட்டுப் பூனை போன்ற பாலூட்டிகளின் கட்டுரைகள் முக்கியமானவை. இந்த பாலூட்டிகள் எதுவும் எளிதில் பார்க்க முடியாமல் போனதற்கு சூழல் சிதைவே காரணம் என்கிறார். காட்டுப் பூனைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது வருத்தமளிக்கும் செய்தியே. 


பக்கி மற்றும் ஆந்தைகளை பற்றிய கட்டுரைகளும் அறிவியல் பூர்வமானவை. மூட நம்பிக்கையின் காரணமாக ஆந்தைகள் அழியும் நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை நினைவுபடுத்தி எச்சரிக்கிறார் ஆசிரியர்.  

 கூகை அல்லது வெண்ணாந்தை, புள்ளி ஆந்தை, பட்டை கழுத்து சின்ன ஆந்தை, கொம்பன் ஆந்தை, பூமன் ஆந்தை, பெரிய காட்டு ஆந்தை, சிறிய காட்டு ஆந்தை, வேட்டைக்கார ஆந்தை, குட்டை காத்து ஆந்தை என தமிழகத்தில் காணப்படும் பல்வேறு ஆந்தையினங்களை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். 

பட்டை தலை வாத்துகளும் இராவடிகள் என்பது ஆச்சர்யமான செய்தி. 

இராவடிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என உரக்கச் சொல்கிறது "தமிழகத்தின் இரவாடிகள்"

Post a Comment

2 Comments