பழனிமலைத் தொடரின் அடிவாரப் பகுதி ஒன்றில் பறவைகளைத் தேடிச் செல்வது எனக்கு பிடித்தமான ஒன்று. தேக்கு மரமும் அத்தி மரமும் நிறைந்த அந்த கானகப் பகுதியில் நுழையும் போது ஒரு ஓடையை கடந்தாக வேண்டும். நவம்பர் முதல் ஜனவரி வரை இங்கே பறவைகளை பார்க்க ஏற்ற கால கட்டம். வலசை வரும் பல பறவைகளை பார்க்கலாம். நான் இம்முறை சென்றது ஏப்ரல் மாதத்தில். மழை பெய்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அங்கே ஆடு மாடு மேய்ப்பவர்கள் மழை இல்லாத துயரத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். கடுமையான கோடையாக இருந்தாலும் வலசை வராத சில பறவைகள் எப்போதும் அங்கு இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். கோடையில் வறண்டிருக்கும் அந்த ஓடையை கடந்து சென்றேன். கானகத்தில் நுழைந்தேன்.
வேதி வால் குருவி [Indian Paradise Flycatcher] , கருஞ்சிட்டு [Indian Robin], வெண் புருவ வாலட்டிக் குருவி [Pied Wagtail], வெண்புருவ சின்னான் [White Browed Bulbul] என எப்போதும் காணப்படும் பறவைகளை காணமுடிந்தது. வழக்கம் போலவே மயில்களும் [Indian Peafowl] இருந்தன. காட்டின் சிற்றோடைகள் வறண்டு போயிருந்தன. தேக்கு மரங்களின் இலைகள் யாவும் தரையை மூடியிருந்தன. பெருஞ்சாம்பல் அணில் [Grizzled Giant Squirrel] ஒன்று தேக்கு மரத்தில் என் வருகை உணர்ந்து ஓடி ஒளிந்தது.
மாஞ்சிட்டு [Common Iora], காட்டுக்கு கோழி [Grey Jungle Fowl], அக்கா குயில் [Common Hawk Cuckoo], மஞ்சள் புருவ சின்னான்[Yellow Browed Bubul], குண்டுகரிச்சான் [Oriental Magpie Robin] என பழனி மலைத் தொடரில் எப்போதும் பார்க்கும் பறவைகள் இந்த வறண்ட கோடையிலும் இருந்தன.
காட்டு ஆந்தை [Jungle Owlet] உருமறை தோற்றம் கொண்டிருந்தாலும் என்னால் அதை தெளிவாக காண முடிந்தது. தமிழ்நாட்டின் மாநில பறவையான மரகதப்
புறாவை [Emerald Dove] மேல் மலைப் பகுதிகளில் பல முறை பார்த்திருக்கிறேன் என்றாலும் கீழ் மலைப் பகுதியில் பார்ப்பது அதுவே முதல் முறையாக இருந்தது. தரையில் இலைகளை கிளறி உணவு தேடிக்கொண்டிருந்தது. கருந்தலை மாங்குயில்கள் [Black Headed Oriole] மரக் கிளைகளில் அங்குமிங்குமாக தாவிக் கொண்டிருந்தது. மழையை எதிர்பார்த்து காத்திருந்த கானகத்து மரங்களுக்கு பறவைகளின் பாடல்கள் போதுமானதாக இல்லையென்றாலும் பறவைகளில் சிறகசைவில் மிச்சமிருந்தது மழைக்கான நம்பிக்கை.
10 Comments
thank you for sharing
ReplyDeleteYou are welcome
DeleteNice blogpost (and a poetic title), tempting one to visit the place!
ReplyDeleteThanks Arvindh
DeleteSuper
ReplyDeleteThank you so much Madhu
DeleteNice info and great photos...
ReplyDeleteThank you so much
Deletecaptured the nature and moments very well in your words.... keep posting your such experience. we are delighted to read this...
ReplyDeleteThank you so much Udhay
Delete