சிவிங்கப்புலி [Asiatic Cheetah] - இந்தியாவின் இழப்பு [India]

இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பின் சமவெளிகளில் சுற்றித் திரிந்த உயிரினம் சிவிங்கப்புலி [Asiatic Cheetah]. இந்தியா மட்டுமல்லாது ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் இவை இருந்தன. தமிழ் நாட்டின் சத்தியமங்கலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசியாக வாழ்ந்த மூன்று சிவிங்கப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இன்றும் ஈரானில் மிக சொற்ப எண்ணிக்கையில் இவை மிச்சம் இருக்கின்றன. 


அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி மட்டுமே நமக்கு காடாக தெரிகிறது. மாறாக புல்வெளிகள் நிறைந்த சமவெளிப்பகுதிகளையும் காடாக கருதி அங்கிருக்கும் உயிர்ச் சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்கம் [Asiatic Lion], புலி [Bengal Tiger], சிறுத்தை [Indian Leopard], பனிச்சசிறுத்தை [Snow Leopard] என பூனை இனத்தின் பல உயிரினங்களை கொண்டிருந்த இந்த தேசம் சிவிங்கப்புலிகளை இழந்து 70 ஆண்டுகளாகிறது. இந்தியாவில் வாழ்ந்த சிவிங்கப்புலி  ஒன்றை சுவிட்சர்லாந்து அருங்காட்சியகம் கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக வைத்து பாதுகாக்கிறது. 

Taxidermy Specimen of Asiatic Cheetah at Zürich Zoological Museum




இந்திய விடுதலைக்கு முன்பாக இவை ஒரு சில மன்னர்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன. திரு.ஜெய் ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது ஆப்ரிக்க சிவிங்கப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர சில முயற்சிகளை செய்தார். தற்போது அந்த திட்டம் என்ன ஆனது எனது தெரியவில்லை. ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள் இந்திய காடுகளுக்கு பொருத்தமாக இருக்குமா என்ற விவாதமும் இன்னும் மிச்சம் இருக்கிறது. ஆப்ரிக்காவில் இம்பாலா [Impala] என்ற மானை வேட்டையாடி பழகிய இவை  இந்தியாவில் இருக்கும் வெளிமான்களை [Blackbuck] எப்படி வேட்டையாடும் ? இருந்தாலும் சிவிங்கப்புலியின் பெயரால் இந்தியாவில் இருக்கும் சில புல்வெளிக் காடுகள் காப்பாற்றப்படுமானால் இவற்றை இந்திய காடுகளில் அறிமுகப்படுத்தலாம். சூழல் பற்றிய பெரிய அக்கறை இல்லாத இந்த காலகட்டத்தில்  காடுகளை காக்க எல்லா விதமான முயற்சிகளும் அவசியமாகிறது. ஈரானிடம்  இருந்து சிவிங்கப்புலிகளை பெற்று இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் [Captive breeding] முயற்சிகள் செய்யலாம். 


Asiatic Cheetah : IUCN Status: Critically Endangered

மேலும் 


Post a Comment

4 Comments