பருவ நிலை பிறழ்வு [Climate Change] குறித்து உலகில் பல்வேறு வல்லுனர்களும் எச்சரித்து வரும் இந்த வேலையில் சுற்றுச் சூழல் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவே அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்து வரும் வெப்பநிலை, அவ்வப்போது ஏற்படும் பேரிடர்கள் பருவ நிலை பிறழ்வை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. வளர்ந்த முதலாம் உலக நாடுகள் தங்கள் நிலப்பரப்பை மாசுபடாமல் பாதுகாக்க மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வாழும் மக்கள் மொத்தமாக இந்த உலகில் உற்பத்தி செய்யப்படும் 80 சதவீதத்தை நுகர்வதாக ஆய்வு சொல்கிறது.
இதற்காக மூன்றாம் உலக நாடுகள் தங்கள் சுற்றுச் சூழலை பணயம் வைக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதும், வேலை வாய்ப்பை அதிகரிப்பது அவசியம் என்பதும் உண்மை தான். தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 அந்நிய முதலீடுகளை கொண்டுவரும் என்பதும், அதன் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதும் அவர்கள் வாதமாக இருக்கலாம். ஏற்கனவே இருக்கும் சுற்றுச் சூழல் சட்டங்களே நமக்கு போதுமானதாக இல்லை என்பதை நாம் கண் கூடாக அனுபவித்து வருகிறோம்.
மனிதனின் அடிப்படை தேவையான தூய்மையான நீரை ஏன் அரசால் இன்னும் முழுமையாக கொடுக்க முடியவில்லை ? நம்முடைய நீர் நிலைகள் யாவும் மாசுபட்டது தான் நம் வளர்ச்சியின் அடையாளமா ? புதிய அந்நிய முதலீடுகள் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக அடையும் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் வருமானத்தை மீண்டும் தூய நீருக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்ய வேண்டி வரும். சுற்றுச் சூழலை சீரழித்து உருவாகும் வளர்ச்சி எப்படி நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியும் ?
சுற்றுச் சூழலை பாதுகாக்காமல் ஏழ்மையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவர முடியாது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் B2 பிரிவில் மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்று சொல்வது மக்களுக்கு சுற்றுச் சூழலின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. தற்போது அரசு அறிவித்திருக்கும் வரைவை திரும்பப்பெற்று சுற்றுச் சூழலை பாதுகாக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டியது காலத்தின் தேவை.
#WithdrawEIA2020Draft
0 Comments