விதிமுறைகளை பேச மறுக்கிறோமா?


ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோதும், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்ட போதும் கூட நாம் விளையாட்டின் விதிமுறைகள் குறித்து அதிகம் பேசவில்லை. தடை நீங்கிய பிறகு நடந்த சில ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. என்ன காரணத்திற்காக ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டதோ அதே காரணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இப்பொது காட்சிகள் அரங்கேறுகின்றன. மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் வெற்றி என்பது வெறும் தடையை நீக்கியதில் மட்டும் தேங்கிவிடக் கூடாது. அப்படி இருப்பின் இந்த போராட்டம் நீர்த்துப்போய்விடும். 





ஏற்கனவே நடந்த போட்டிகளில் சிலர் மரணம் அடைந்திருப்பதும் காவலர் ஒருவரே உயிர் நீத்ததும் போட்டிகளை முறைப்படுத்தாமல் நடத்தப்படுவதால் ஏற்படும் விளைவாகவே பார்க்க வேண்டியுள்ளது. அடுத்து நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்சிகள் முறையாக நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டை விரும்பிய நாம் இந்த நிகழ்வுகளில் மௌனம் காத்தோம். இந்த மௌனம் நமக்கு சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அதுவே ஆபத்தாக முடியவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்து நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்சிகள் முறையாக நடத்தப்பட வேண்டும். தடை செய்யப்படுவதற்கு முன்பு என்னென்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டதோ அந்த விதிமுறைகள் மீண்டும் பின்பற்றப்பட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டியதில் இருந்து, மாடுகளுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனை வரை அனைத்தும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 





கலாசாரம் பண்பாடு சார்ந்து இந்த விளையாட்டை நாம் எப்படி புரிந்து கொண்டோமோ, காளை மாடுகளை அழிவில் இருந்து பாதுகாப்பது அவசியம் என்ற விழிப்புணர்வை எப்படி பெற்றோமோ, அது போலவே விளையாட்டின் விதிமுறைகளை பற்றி பேசுவதும், விவாதிப்பதும், நிறைவேற்றப்படுவதும் அவசியம் என நினைக்கிறேன். பல நூற்றாண்டுகள் தொன்மை கொண்ட ஒரு நிகழ்ச்சியை தொடந்து நடத்தப்பட வேண்டுமென்றால் அதை பற்றிய புரிதல் முழுமையாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மனித உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதும், காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியதும் அவசியம். அரசின் பங்கு இதில் எவ்வளவு முக்கியோமோ அது போலவே மக்களின் பங்கும் முக்கியம். இதை நாம் செய்யத் தவறினால், இதுவரை நாம் முன்னெடுத்த முயற்சிகள் அர்த்தமற்றதாகிவிடும். 


Post a Comment

1 Comments