கடந்த மூன்று ஆண்டுகளாக
பழனியில் மழை இல்லாதது குறித்து எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில்
பல இடங்களிலும் பரவலாக மழை பெய்த போதிலும் பழனியில் மழை இல்லை என்பது உண்மையே.
பழனியில் இருக்கும் வையாபுரி குளம் முற்றிலுமாக வறண்டுபோய் விட்டது. பெரும்பாலான
இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. தென்னை மரங்கள் பலவும் அழிந்து
கொண்டிருக்கின்றன. பழனி இப்படி ஒரு வறட்சியை சந்திக்க என்ன காரணம்? நான் வானிலை
நிபுணர் இல்லை. ஆனால் ஒரு சூழல் ஆர்வலர் என்ற முறையில் என் தனிப்பட்ட கருத்தை
பதிவு செய்ய விரும்புகிறேன்.
பழனி மலைத் தொடர்ச்சிக்கு
மேற்கே அமராவதி வரை பெய்யும் தென் மேற்கு பருவ மழை பழனி மலைத் தொடர்ச்சியில்
பெய்வதில்லை. வட கிழக்கு பருவ மழையும் பொய்த்துப் போய் விடுகிறது. என்னை
பொறுத்தவரையில் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம் என தோன்றுகிறது.
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் ஏராளமான மரங்கள் கருகி இருப்பதை
பார்க்க முடிகிறது. காட்டுத்தீ நம் காடுகளை பெரிது நாசம் செய்கிறது. இதற்கு காரணம்
மனிதர்களே. மலை பகுதிகளில் புதிது புதிதாக கட்டிடங்கள் முளைக்கிறது. சாலை
ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளாக கிடக்கிறது. மது அருந்திய குவளைளில் குரங்குகள்
உணவு தேடுகின்றன. கொடைக்கானல் நகரிலேயே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெள்ளி
நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. காடுகள் சேதம் அடைவதை
கண்கூடாக பார்க்க முடிகிறது. நம்மால் காட்டை நாசம் செய்ய முடியுமெனில், இயற்கை
நமக்கு வேறு என்ன செய்யும்?
பழனி நகரில் கட்டப்பட்ட
பேருந்து நிலையம் குளத்தை மூடி கட்டப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
காட்டின் அழிவு மழையை குறைக்கிறது. கொடைக்கானல் செல்லும் சாலை, சுற்றுலாப் பயணிகள்
தூக்கி எறிந்த குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. இயற்கைக்கு எதிராக செல்லும்
மனிதனின் போக்கு கடுமையான விளைவுகளை உருவாக்கி வருகிறது. வையாபுரி குளத்தில் நீர்
நிறைந்து இருக்கும் போது எப்படி அழகாக இருக்கும் என்பது பழனி மக்களுக்கு தெரியும்.
ஆனால் இன்று குளம் முற்றிலும் வறண்டு விட்டது. இயற்கையை முறையாக பாதுகாக்க
தவறினால் இன்னும் கடுமையான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். வானத்தை
பார்த்துக் கொண்டிருந்தால் மழை பெய்துவிடாது. இயற்கையை பாதுகாக்க நம்மால் இயன்றதை
செய்வோம். இதை நான் எப்போதும் உரக்கச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் வானிலை
நிபுணர் இல்லை.
0 Comments