மயில்களை கொல்ல வேண்டாம்




மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அவ்வப்போது நடக்கும் முரண்பாடுகளால், பலமுறை யானைகள், காட்டெருமைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் என ஏராளமான உயிரினங்கள் மடிந்துள்ளன. பல சமயங்களில் தங்கள் மாடுகளை கொன்று விடுவதாக கூறி புலிகளுக்கும் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்ததுண்டு. தற்போது, அந்த பட்டியலில் மயிலும் சேர்ந்துள்ளது. பெருந்துறையில் இருபது மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.


விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக கூறி தற்போது விவசாயிகள் போராட்டத்திலும் இறங்கி உள்ளனர். மயில்கள் பயிர்களை நாசம் செய்வதாக சொல்பவர்கள் சில விஷயங்களை மறந்து விடுகின்றனர். வேளான் நிலங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள். பயிர்களை தாக்கும் பல பூச்சி இனங்களை உண்டு அவற்றின் பெருக்கத்தையும்  கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள் தான்.


விவசாயிகளுக்கு ஒரு வகையில் மயில்கள் நன்மையே உண்டாக்குகின்றன. மயில்கள் நம் தேசத்தின் பொக்கிஷம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லாத பெருமை மயில்களால் இந்தியாவிற்கு உண்டு. இவை விஷம் வைத்துக் கொல்லப்படுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான தீர்வாக மயில்களுக்கு என்று புதிய சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.


வேளான் நிலங்களுக்கு இடையே பயிர் செய்ய  முடியாமல் வெறும் குன்றுகளாக, சிறிய மலைகளாக இருக்கும் பயன்படாத இடங்களை மயில்களுக்கான இடமாக மாற்ற வேண்டும். அவற்றின் உணவிற்கான தேவையும் அந்த இடங்களில் உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எனவே மயில்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.



Post a Comment

0 Comments