வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்

யானைகளை அழிவில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. உலகில் யானைகள் அதிகம் வாழும் எட்டு நாடுகளை சேர்ந்த வனத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள், சுமார் ஐம்பது தேசங்களில் வாழ்கின்றன.



போட்ஸ்வானா, காங்கோ, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, கென்யா, தான்சானியா, மற்றும் தாய்லாந்து நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், யானைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவற்றை அழிவில் இருந்து காக்கவும் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்த நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

  • வேட்டைகளை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக யானையின் உடல் பாகங்களை கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும் தகவல் பரிமாற்றங்களை இந்த நாடுகள் மேற்கொள்ளும். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஆன சிக்கல்களை களைவதற்காக உள்ளூர் அமைப்புகள் உருவாக்கப்படும்.

  • யானைகளின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய அறிவியல் முறைகள் பின்பற்றப்படும்.

  • தொலைநோக்கு அடிப்படையில், விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.





ஐம்பது சதவீதம் ஆசிய யானைகள் இந்தியாவில் மட்டுமே வாழும் சூழ்நிலையின் அவை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது. வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த யானைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்களின் காரணமாக நிறைய சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் அவற்றின் வசிப்பிடங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன.


1992 -ல் தொடங்கப்பட்ட யானைகள் செயல்திட்டம் (Project Elephant), யானைகள் வாழும் மாநிலங்களுக்கு, யானைகளின் வாழும் வனப்பகுதியை பாதுகாக்கவும், யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது, புலிகளுக்கு செயல்படும் தேசிய ஆணையத்தை (National Tiger Conservation Authority) போல, யானைகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (National Elephant Conservation Authority).


உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் வனங்களை விட்டு வெளியேறுவதும் அவற்றை மக்கள் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. யானைகள் தேசிய ஆணையம் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண வேண்டிய அவசியத்தில் உள்ளது. இல்லையேல் "யானைகள் அட்டகாசம்" என்ற செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகும். உண்மையில் யார் அட்டகாசம் செய்வது? யானைகளா? இல்லை மனிதர்களா?










Post a Comment

0 Comments