ஒரு குறள் : உலகச் செய்தி (Thirukkural for India)

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்



இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட குறள் அத்தனையும், இன்றும் ஏற்புடையதாக இருப்பது நாம் அறிந்ததே. அரசியல், அறநெறி, கல்வி, அன்பு, காதல் யாவும் பொருந்தும் என்பதை விட ஆச்சர்யம், சூழல் பற்றிய வள்ளுவரின் குறள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சுற்றுச் சூழல் நன்றாகத் தானே இருந்தது. அந்த சமயத்திலும் எப்படி வள்ளுவரால் காட்டின் பெருமையை எழுத முடிந்தது? அப்படியானால் காடுகள் அழிந்து போகும் என்பதை முன்னரே அறிந்திருந்தாரா?

நீரை கூட மணி நீர் என்கிறார். மணி நீரை இன்றைய சூழ்நிலையில் எங்காவது காண முடிகிறதா? காவிரியில் பார்க்க முடியுமா? நொய்யலில்? அப்படி ஒரு தெளிந்த நீர் அன்றைக்கு சாத்தியமாக தான் இருந்திருக்கும். அப்படி இருந்தும் அதை இழந்து விட கூடாது என்ற எண்ணம் வள்ளுவருக்கு இருந்திருக்கிறது. நாம் அதை இழந்தும், கவலை இன்றி இருக்கிறோம்.

மண்ணையும் மலையையும் பிரித்து சொன்னது என்ன மாதிரியான சிந்தனை? மண் வேளாண்மைக்கு எக்காலத்திலும் வேண்டும் என்பதால் பிரித்திருக்கலாம். மலைகள் இயற்கையின் மிகப்பெரிய கொடை. அன்றைய சூழ்நிலையில், மலை என்பது அதிகம் புழங்கப்படாத இடமாக இருந்திருக்கக் கூடும். இருப்பினும் மலையின் அவசியம் அறிந்து சொன்னது ஆச்சர்யம் தான்.

காடுகளை தொடர்ந்து இழந்து வந்த போதும், இத்தனை அறிவியல் வளர்ச்சிக்கு பிறகும் காட்டின் அவசியத்தையும், அதில் வாழும் பல்லுயிர்களை பற்றியும் முழுமையாக நம் சமுதாயம் அறிந்து கொள்ளவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் பெரும்பாலான பகுதி காடுகளாக இருந்த போதும், அவற்றை இழந்து விடக் கூடாது என்ற வள்ளுவரின் எண்ணம், எவ்வளவு தொலை  நோக்கானது?

ஒரு தேசத்தின் ஆரோக்யத்திற்கு தேவையானவற்றை வள்ளுவர் சொன்னதை விடவும் ஆச்சர்யம், இன்றும் கூட அந்த தேவையை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்.




Post a Comment

0 Comments