பதினெட்டாம் நூற்றாண்டின் மழை : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்



 திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய, "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை" வாசித்தேன். 27 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும்  தனித்துவம் வாய்ந்ததே இந்த நூலின் சிறப்பாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. கதையில் வரும் மனிதர்கள் யாவரும், கற்பனை பாத்திரங்கள் என்ற எண்ணத்தை உடைக்கும் அளவிற்கு, கதா பாத்திரங்கள் தன்னியல்பில் உலா வருகின்றன. நாம் எப்போதோ கடந்து போன மனிதர்களே கதையில் வருவது போன்ற உணர்வே ஒவ்வொரு கதையின் நகர்விலும் தொற்றிக்கொள்கிறது.

எல்லா கதைகளின் மையத்திலும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் அப்படியே இருக்கின்றன. கதை அந்த முடிச்சை சுற்றியே பயணிக்கிறது. அவிழ்க்கப்படாத அந்த மர்மங்கள் தொடர்ந்து நம்மை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.அந்த புதிர் தான் கதையை தாங்கி நிற்கவும், மனதை பாரம் கொள்ளவும் செய்கின்றன. ஒவ்வொரு கதையிலும் ஒரு தனிப்பட்ட பாத்திர படைப்பு, தனிப்பட்ட குணங்களோடு சுற்றி அலைகிறது. அந்த தனிப்பட்ட குணம் ஏன் ஏற்பட்டது? எதற்காக அந்த பாத்திர படைப்பு அந்த புள்ளியில் நின்று கொண்டே இருக்கிறது? என்ற பொதுவான கேள்விகள் கதையை மெல்ல நகர்த்துகிறது.

வேலய்யா நினைவுகளில் ஏன் பனை எரிகிறது? சித்ரலேகா ஏன் இத்தனை உடைகள் அணிகிறாள்? ருக்மணியின் அப்பா என்ன ஆனார்? சுகி எப்படி பிறப்பில் இருந்தே பறவைகளை அறிகிறாள்? புத்தன் ஏன் குளத்தில் இறங்கவே இல்லை? சொந்த ஊர் சென்றவள், ஏன் இரண்டு மணி நேரத்தில் திரும்பினாள்? நாவுக்கரசு எதற்காக தன்னை விற்றுக் கொள்கிறான்? தணிகையின் பார்வையில் ஏன் எல்லாமும் மறைந்து போகின்றன? - இப்படி ஒவ்வொரு கதையின் முடிவிலும் கேள்விகள் மிஞ்சி நிற்கின்றன. கதையின் சுவாரசியம் முழுவதும் இந்த விடையில்லாத கேள்விகளில் தான் புதைந்திருக்கிறது. அவரவர் விருப்பமான வழியில் அதற்கான விடைகளை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல.

என்னை அதிகம் கவர்ந்த கதை "இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன". சுகிக்கு நன்றாக பேச தெரியும் என்பதும், அவளுடைய எண்ணங்கள் பறவைகளின் அலகுகளை போல கூர்மையானது எனவும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவள் எப்போதும் பேச மறுக்கிறாள். அவளுடைய உலகில் பறவைகள் மட்டுமே இருக்கின்றன. மாநகரங்களின் இயந்திர வாழ்க்கையில் பறவைகளை முற்றிலும் மறந்து போன பலருக்கும், இந்த கதை ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கலாம். உண்மையில் இன்றும் நகரங்களில் பறவைகள் எப்படியோ தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றன. மாநகரம் என்பது மனிதர்கள் வாழ தகுந்த சூழ்நிலை என்பதை பறவைகள் மூலமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். பிறக்கும் போதே பறவைகளின் மீதான ஈர்ப்பு எப்படி சுகிக்கு விதைக்கப்பட்டது என்பதே மிகப்பெரிய கேள்வி. அப்படியே இருந்தாலும் ஏன் பேச மறுக்க வேண்டும்? இல்லை அப்படி இருப்பது தான் இயல்பா? அப்படியானால் மற்றவர்கள் இயல்புக்கு முரணானவர்களா?

நிஜத்தில் இந்த கதைகளில் வரும் யாவரும் வாழ்ந்து கொண்டிருப்பார்களா? கற்பனையும் உண்மையும் ஒரே புள்ளியில் சந்திக்க இயலுமா? அப்படியானால் கதை உண்மையாகுமா அல்லது அவர்களது வாழ்க்கை கதை போல மாறிவிடுமா? ஒருவேளை, இந்த கதைகளில் வரும் யாரேனும், இந்த கதையை படிக்க நேர்ந்தால், அந்த விடை தெரியாத முடிச்சுகள் அவிழத் தொடங்கும்.


உலகை எந்த அளவுக்கு கூர்மையாக பார்த்து உள்வாங்கி, நினைவில் வைத்திருக்கிறார் என்பது, எஸ்.ரா அவர்களின் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெள்ளக் கட்டியை போல உலகை தன் இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து விட அவர் முயன்றதன் விளைவு, இந்த புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் அத்தனை பேருக்கும் அந்த வெள்ளக் கட்டியின் சுவையை காட்டி விடுகிறார். இந்த சிறப்பே எஸ்.ரா அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து  படிக்க வைக்கிறது என நினைக்கிறேன். 


பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

இந்திய வானம்

காண் என்றது இயற்கை


Post a Comment

0 Comments