எட்டி உதைப்போம்... உலகம் உருளட்டும் ...

கட்டுக்கடங்காத ஊழல் இன்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் பாதித்துள்ளது. எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், ஊழலில் தாக்கம் அவர்களை நேரடியாக பாதிக்கவே செய்கிறது. சமூகத்தில் உழைப்பவர்களையும் அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.


இன்றைய சமூகத்தில் அதிகம் பொருள் ஈட்டக்கூடியவனாக கருதப்படும் மென் பொறியாளர்கள் யாவரும், பணத்துக்காக தங்கள் ஊரை விட்டு , வெளி மாநிலங்களிலும், பெரு நகரங்களிலும், குடியிருக்க வேண்டியதாக இருக்கிறது. இவர்களின் வேலை பளு என்பது எல்லா நேரங்களிலும் இலகுவாக இருப்பதில்லை. விடுமுறை நாட்களிலும், வேலை செய்யும் நண்பர்கள் உண்டு. இரவு முழுக்க உறக்கம் கொள்ளாது, வேலை செய்பவர்கள் உண்டு. இப்படி உறக்கத்தை தொலைத்துவிட்டு, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை, தன் வீட்டின் கடனுக்காகவே செலுத்த வேண்டியதாக இருக்கிறது. இருபது லட்சம் கடன் வாங்கி வீடு கட்டும் ஒருவன், அதை அடைக்க இருபது வருடங்கள் உழைக்கிறான். வங்கியில் கொடுக்கப்படும் கடன், இருபது அல்லது பதினைந்து வருடங்கள் கட்டப்படும் அளவுக்கு வரைமுறை படுத்தப்படுகிறது. இது போக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் வருமானவரி செலுத்துபவனாகவும் இருக்கிறார்கள்.


 மென் பொருள் துறையில் மட்டும் இந்திய அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமான வரி பல கோடிகளை தாண்டுகிறது. அரசுக்கு இவ்வளவு வருமானத்தை கொடுக்கும் இவர்களுக்கு என்று அரசாங்கம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. மாறாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, எதாவது செய்யலாம். ஆனால் வெறும் இலவசங்களை அள்ளி இறைத்து, அதிலும் ஊழல் செய்து, யாருடைய முன்னேற்றத்திற்கு, இந்த அரசியல்வாதிகள் பாடுபடுகிறார்கள்?


ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை தருகிற கட்சி, எவ்வளவு பணத்தை கொள்ளை அடித்து வைத்திருக்கிறது? இவர்கள் கையில் மீண்டும் ஆட்சி கிடைத்தால், எவ்வளவு பணத்தை இவர்கள் மறுபடியும் கொள்ளை அடிப்பார்கள்? ஆண்டுக்கணக்கில் உழைத்து வருமான வரி செலுத்துபவர்களின் பணத்தை கொள்ளை அடித்து, இவர்கள் சொந்த தேசத்து மக்களேயே பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள்.


ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலைக்கு என்று வாக்காளன் தள்ளப்பட்டனோ, அப்போதே இவர்கள் விரட்டப்பட்டிருக்க வேண்டும். தன் வீட்டுக்கடனை அடைக்க எத்தனை இரவுகளை ஒரு மென் பொறியாளன் தொலைக்கிறான்? அந்த பணம் இந்த ஊழல்வாதிகள் கொள்ளை அடிக்கும் பணத்தில், ஒரு கொசுறு கூட கிடையாதே.. இன்று, அதிகம் வருமானம் ஈட்டும், மென் பொருள் துறை சார்ந்தவர்களின் நிலையே இப்படி என்றால், தினசரி சம்பளத்தை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன? இவர்களின் வாழ்வு எப்போது முன்னேற போகிறது?


எந்த வக்காளனாவது இவர்கள் முன்னால் வந்து, இலவசங்கள் வேண்டும் என்று கேட்டானா? இலவச திட்டங்களுக்கு செலவு செய்த பணத்தை, எவ்வளவோ நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.. கொள்ளை அடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் வீடு வீடாக போய் கொடுத்து, ஓட்டு பொறுக்கிகளாக திரியும் இவர்கள், இந்த சமூகத்துக்காக உழைக்கப் போகிறார்களா? ஓட்டுக்காக பணம் கொடுக்க வந்த பலரை தற்போது பொதுமக்களே காவல் துறையில் ஒப்படைக்கிறார்கள். உண்மையில், இந்த மக்கள் தான் நாட்டுக்கு தேவை.


யாராவது பணம் கொடுத்தால், அவர்களை அப்பொழுதே, காவல் துறையில் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களுக்கு இருக்க வேண்டும். அரசியல் வியாபாரமாகி பல நாட்கள் ஆகிவிட்டன. தற்போது அந்த வியாபாரத்தில், மக்களையும் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்படி ஆனாலும் இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். தலைவலி என்று மருத்துவமனைக்கு போனால் கூட ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை விரைவிலேயே வந்து விடும்.


2G அலைக்கற்றை ஊழலில் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பை ஈடு செய்ய இந்தியாவில் இருக்கும் அத்தனை மென் பொறியாளர்களும், தொடர்ந்து எத்தனை வருடங்களுக்கு, உழைத்து வருமான வரி செலுத்த வேண்டும். ஒரு தனி மனிதனின் சுயநலத்துக்காக இந்த தேசம் முழுவதும் உள்ள மக்கள், உறக்கத்தை தொலைத்து, உழைக்க வேண்டுமா? எந்த தேசத்து மக்களாவது இதை அனுமதிப்பார்களா?


ஒரு குடும்ப சண்டைக்காக, மதுரையில் மூன்று உயிர்களை எரித்துக் கொன்றார்களே.. அதன் பிறகும் அவர்களேயே தேர்ந்தெடுக்க அந்த ஊர் மக்களால் எப்படி முடிகிறது? பணத்திற்க்காகவா? அப்படியானல் மூன்று பேரின் உயிரை குடித்ததற்கு இவர்களும் தானே காரணம்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை! மானம், வீரம் நிறைந்த மதுரை!! இன்றைக்கு எங்கே இருக்கிறது?


எந்த தேர்தல் அறிக்கையிலாவது, தமிழக அரசின் கடனை அடைக்கிறேன் அன்று யாரவது சொல்கிறார்களா? சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்று எவனாவது பிரச்சாரம் செய்கிறானா? இயற்கை வேளாண்மை பற்றி யாராவது பேசி கேட்டிருக்கிறீர்களா? மீண்டும் நம்மை சுரண்டி திங்க நம்மிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாவும் பெரியாரும் பேசித் திரிந்த வீதிகளில், இன்று வடிவேலுவும், செந்திலும், சிங்க முத்துவும் பேசித் திரிகிறார்கள்? யாருக்காக?


ஒரு நல்ல அரசியல் தலைமை கிடைக்கும் வரை இந்த கட்சிகள் அனைத்தையும் புறக்கணிப்பதை தவிர வேறு வழி இல்லை. அதே சமயம் ஓட்டுப் போடாமல் இருப்பதும் தவறு. சுயேட்சைகள் நல்லவர்களாக இருந்தால் அவர்களை ஆதரிக்கலாம். அப்படியும் யாரும் இல்லையென்றால்,  இன்றைய சூழ்நிலையில், நாம் இவர்களை புறக்கணிக்க நம்மிடம் இருக்கு ஒரே ஆயுதம் 49 O மட்டுமே.




Post a Comment

0 Comments